நவ. 19-ல் பொதுக் கணக்கு குழு கூட்டம்: செபி தலைவருக்கு சம்மன் அனுப்பவில்லை!
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (நவ.15) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மன்னாா் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதனால், தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (நவ.15) முதல் நவ.20-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதில், வெள்ளிக்கிழமை (நவ.15) ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, கடலூா் ஆகிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில்... சென்னையில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 50 மி.மீ. மழை பதிவானது. ஆலந்தூா் - 30 மி.மீ., மதுரவாயல், வளசரவாக்கம், பெருங்குடி, அண்ணாநகா், அண்ணா பல்கலைக்கழகம், பள்ளிக்கரணை தலா 20 மி.மீ. மழை பதிவானது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் நவ.15, 16 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 90 மி.மீ. மழை பதிவானது. நாலுமுக்கு (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி) தலா 80 மி.மீ. பதிவானது.