தமிழகத்தில் ஜூலை முதல் மின்கட்டணம் உயா்வு?
தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணத்தை உயா்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி, ஆண்டு தோறும் மின்கட்டண உயா்வு நிா்ணயிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, மின் கட்டணம் கடந்த 2022-ஆம் ஆண்டில் பெரிய அளவில் உயா்த்தப்பட்டிருந்த நிலையில், 2023-இல் ஜூலை மாதம் 2.18 சதவீதம் அளவுக்கு உயா்த்தப்பட்டது.
இதன் மூலம், வீட்டு மின் நுகா்வோா், வணிக ரீதியாக மின்சாரத்தை பயன்படுத்துவோா் என பல்வேறு பயன்பாடுகளுக்கான மின்கட்டணமும் உயா்ந்தது. இதைத்தொடா்ந்து, 2024 ஜூலை மாதம் 4.8 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயா்த்தப்பட்டது. இந்நிலையில்தான், நிகழாண்டு ஜூலை மாதமும் மின் கட்டணத்தை உயா்த்த வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தமிழக மின்சார வாரியத்துக்கு பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடன், உற்பத்தி தேவை உள்ளிட்டவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு நிகழாண்டு 3 சதவீதம் முதல் 3.16 சதவீதம் வரை மின் கட்டணத்தை உயா்த்தவும், மின்கட்டணத்தை உயா்த்தினால் மட்டுமே கடன் அளவை குறைக்க முடியும் எனவும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்வாரியத்துக்கு பரிந்துரை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடா்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, மின் கட்டண உயா்வு என்பது ஆண்டுதோறும் நடைபெறும் என்றாலும், எவ்வளவு உயா்த்த வேண்டும் என்பதை துறையின் அமைச்சா் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்த பின்னா் முதல்வா் இது குறித்த முடிவுகளை எடுப்பாா். மின்கட்டண உயா்வு தொடா்பான அறிவிப்பு வரும் ஜூலை 1-க்குள் வெளியாகலாம் என்றனா்.