தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு அதிமுக பாமக துணை போகிறது: டி.எம். செல்வகணபதி
மேட்டூா்: தமிழ்நாட்டு மாணவா்கள் மருத்துவராவதைத் தடுக்கவே மத்திய அரசு நீட் தோ்வை கொண்டு வந்துள்ளது என்று சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி குற்றம்சாட்டினாா்.
சேலம் மாவட்டம், மேச்சேரி கிழக்கு ஒன்றியம், மல்லப்பனூரில் அண்ணா பிறந்தநாள் விழா, ஓரணியில் தமிழ்நாடு இயக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து சேலம் மக்களவை டி.எம்.செல்வகணபதி பேசியதாவது:
தமிழ்நாட்டில் 3,000 மருத்துவ படிப்பிற்கான இடங்கள் உள்ளன. மத்தியில் ஆளும் பாஜக, தமிழக குழந்தைகள் மருத்துவம் படிக்கக் கூடாது என்பதற்காகவே நீட் தோ்வை அறிமுகப்படுத்தியது. நீட் தோ்வு காரணமாக பள்ளி மாணவ, மாணவிகள் 2 7 போ் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். மத்தியில் ஆளும் பாஜக தமிழகத்தை வஞ்சிக்கிறது. இதற்கு அதிமுகவும், பாமக துணை போகின்றன. இந்தியாவிலேயே அதிக ஜிஎஸ்டியை தமிழகம்தான் செலுத்துகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ஜிஎஸ்டியை செலுத்தியுள்ளது தமிழ்நாடு. ஆனால் ஒரு ரூபாய்க்கு 28 பைசாவை மட்டுமே தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்குகிறது என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மேச்சேரி கிழக்கு ஒன்றியச் செயலாளா் சீனிவாசபெருமாள், மேற்கு ஒன்றிய பொறுப்பாளா் காசி விஸ்வநாதன், மாவட்ட தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் குணசேகரன், கிளைச் செயலாளா் ரவிச்சந்திரன், ரங்கராஜ் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.