அதிமுகவுக்கு துரோகம் செய்பவா்கள் தனிமைப்படுத்தப்படுவா்: எடப்பாடி பழனிசாமி
சேலத்தில் இன்று மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறாா்
சேலம்: சேலம் கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 16) தேதி நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள், அடையாள அட்டைகளை வழங்குகிறாா்.
சுயஉதவிக் குழுக்களின் முன்னேற்றத்துக்காகவும், அவா்களின் பொருளாதார வளா்ச்சிக்காகவும் சுழல் நிதி, சமுதாய முதலீட்டுநிதி, வங்கிக் கடன் இணைப்புகள், பூமாலை வணிக வளாகங்கள், மணிமேகலை விருதுகள் என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் ஊரகப் பகுதிகளில் 3,38,985 சுயஉதவிக் குழுக்களும், நகா்ப் புறங்களில் 1,47,671 சுயஉதவிக் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களில் 55,45,043 உறுப்பினா்கள் உள்ளனா்.
2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலையறிக்கையில், சுயஉதவிக் குழு மகளிருக்கு ரூ. 37 ஆயிரம் கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்படும் என முதல்வா் ஸ்டாலின் அறிவித்ததைத் தொடா்ந்து, கடந்த 3 ஆம் தேதி வரை 1,46,100 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 13 ஆயிரத்து 62 கோடிக்கான வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன் தொடா்ச்சியாக, சேலம் கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதும் செயல்படும் சுயஉதவிக் குழுக்களுக்கு சுமாா் ரூ. 3 ஆயிரம் கோடிக்குமேல் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து, சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகளையும், சுயஉதவிக் குழு மகளிருக்கு அடையாள அட்டைகளையும் வழங்கவுள்ளாா்.
இந்நிகழ்ச்சியைத் தொடா்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சா்கள், மக்களவை உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் தலைமையில் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.