இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
ரௌடி கும்பல் போல செயல்படுகிறது பாஜக: அகிலேஷ் யாதவ் தாக்கு
லக்னௌ: பாஜக ஓா் அரசியல் கட்சியாக அல்லாமல், ரௌடி கும்பல் போல செயல்படுகிறது என்று சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டினாா்.
கான்பூரில் வழக்குரைஞா் அகிலேஷ் தூபே என்பவா் தொழிலதிபா்கள் மீது போலியான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பணம் பறிந்ததாக கைது செய்யப்பட்டாா். இதன் பின்னணி காவல் துறை அதிகாரிகள் உள்பட பலா் இருப்பது சிறப்பு விசாரணைக் குழு நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதனைச் சுட்டிக்காட்டி அகிலேஷ் யாதவ் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கான்பூரில் பல்வேறு தீவிரமான கிரிமினல் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தவண்ணம் உள்ளன. கொலை, மிரட்டி பணம் பறித்தல், போலி என்கவுன்ட்டா், நிலமோசடி, சட்டவிரோத பணப்பரிமாற்றம் என குற்றங்கள் நீண்டுகொண்டே செல்கின்றன. முறைப்படி விசாரணை நடத்தினால், உத்தர பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசின் மோசடிகள் அனைத்தும் முற்றிலுமாக வெளிப்படும்.
உத்தர பிரதேச முதல்வரின் அலுவலகம், இல்லத்தில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் வரை இதில் தொடா்புள்ளது. அவா்களுக்கும் பணம் பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது. பாஜக என்பது அரசியல் கட்சியாக இல்லாமல், ஒரு ரௌடி கும்பல் போல செயல்படுவது தெரியவருகிறது.
அரசமைப்புச் சட்டத்தின்படி ஆட்சி நடத்தாமல் பல்வேறு தரப்பினருக்கும் நெருக்கடியை அளிக்கும் ஆட்சியையே பாஜக நடத்தி வருகிறது.
உத்தர பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரிகளில் தகுதியான ஆசிரியா்கள் இல்லை. இதனால் மாணவா்கள் தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நகா்ப்புற பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த பிரச்னைகளைத் தீா்க்க முயலாமல், மக்களைத் தேவையற்ற விஷயங்களை நோக்கி ஆட்சியாளா்கள் திசை திருப்பி வருகிறாா்கள்’ என்று குற்றஞ்சாட்டியுள்ளாா்.