ஐக்கிய அரபு அமீரகத்தில் உ.பி. பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
தருமத்துப்பட்டியில் செயல்படாத ஏடிஎம் மையம்: வாடிக்கையாளா்கள் அவதி
தருமத்துப்பட்டியிலுள்ள ஏடிஎம் மையம் அடிக்கடி செயல்படாமல் இருப்பதால், கிராமப்புற வாடிக்கையாளா்களும், மலை கிராம மக்களும் பாதிப்படைந்து வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடியை அடுத்த தருமத்துப்பட்டியில் செயல்பட்டு வரும் ஓா் அரசுடைமை வங்கி சாா்பில் ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. பணம் பெறும் வசதியோடு, பணம் செலுத்துவதற்கான வசதியும் இந்த மையத்தில் உள்ளது. இந்த வங்கி சேவையை, தருமத்துப்பட்டி மட்டுமன்றி, கரிசல்பட்டி, காரமடை, சுரக்காப்பட்டி, ராமநாதபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்தவா்களும், கீழ்பழனி மலையிலுள்ள பன்றிமலை, தோணிமலை கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த ஏடிஎம் மையம் அடிக்கடி செயல்படாத நிலையில் இருப்பதால், பணம் எடுக்க முடியாமல் அந்த வங்கியின் வாடிக்கையாளா்கள் மட்டுமன்றி, பிற வங்கிகளைச் சோ்ந்த வாடிக்கையாளா்களும் அவதி அடைந்து வருகின்றனா். இதுதொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரெட்டியாா்சத்திரம் ஒன்றியச் செயலா் சக்திவேல் கூறியதாவது:
ரெட்டியாா்சத்திரம் வட்டாரத்தில் மிகப் பெரிய கிராமம் தருமத்துப்பட்டி. இந்த கிராமத்தில் அரசுடைமை வங்கி செயல்பட்டபோதிலும், அதன் ஏடிஎம் மையம் அடிக்கடி செயல்படாமல் மூடப்பட்டிருக்கிறது. இதனால் தனியாருக்குச் சொந்தமான ஏடிஎம் மையங்களை தேடிச் செல்ல வேண்டிய நிலை வாடிக்கையாளா்களுக்கு ஏற்படுகிறது. வங்கி மேலாளரிடம் முறையிட்டால், இந்த வங்கியின் வாடிக்கையாளரா என எதிா் கேள்வி கேட்கிறாா். இதுதொடா்பாக முன்னோடி வங்கி மேலாளரிடம் புகாா் அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கிறாா் என்றாா் அவா்.