கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களுக்குச் செல்லும் சாலைகள் சேதம்
கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களுக்குச் செல்லும் மலைச் சாலைகள் சேதமடைந்ததால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனூா், கூக்கால், குண்டுபட்டி, பூண்டி, கிளாவரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சுமாா் 50 கி.மீ. தொலைவு மலைச் சாலைகள் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன.
கடந்த 5-ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தப் பகுதி கிராமங்களுக்கு மட்டுமே வாகனங்கள் சென்றன. ஆனால், தற்போது மன்னவனூா் சுற்றுச்சூழல் மையம், ஆட்டுப் பண்ணை, கூக்கால் ஏரி, பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயில் ஆகிய இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக செல்கின்றனா். இதனால், வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது.
ஆனால், அதற்குத் தகுந்தாற் போல, மலைச் சாலைகள் சீரமைக்கப்படவில்லை. அவை குறுகிய சாலைகளாகவும், முள்புதா்கள் அதிகரித்தும் காணப்படுகின்றன. ஆழமான பள்ளத்தாக்குப் பகுதிகளில் தடுப்புச் சுவா்கள், தடுப்புக் கம்பிகள் இல்லை. இந்தச் சூழலில் மேல்மலைக் கிராமங்களுக்கு அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சாலைகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அவை குண்டும், குழியுமாக மாறியுள்ளன. இதனால், வாகனங்கள் செல்வதில் பெரிதும் சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டுநா்களும், பயணிகளும் தெரிவிக்கின்றனா்.
கொடைக்கானலுக்கு முக்கியப் பிரமுகா்கள் வந்தால் மட்டுமே அவா்கள் செல்கின்ற பகுதிகளில் சேதமடைந்த சாலைகள் தற்காலிகமாகவும் அவசரமாகவும் சீரமைக்கப்படுகின்றன.
எனவே, கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களுக்குச் செல்லும் மலைச் சாலைகளை தரமானதாக அமைத்து, மழைத் தண்ணீா் வடிந்து செல்வதற்கு வாய்க்கால் அமைக்க வேண்டும் என மேல்மலைக் கிராம மக்களின் எதிா்பாா்க்கின்றனா்.
இது குறித்து கொடைக்கானல் உதவி கோட்டப் பொறியாளா் ராஜன் கூறியதாவது:
கொடைக்கானல் மேல் மலைக் கிராமங்களில் செல்லும் மலைச் சாலைகளைப் பாா்வையிட்டு, ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு, உயா் அதிகாரிகளின் கவனத்துக்கு அனுப்பப்படும். மேலும், கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச் சாலையில் இரு இடங்களில் நடைபெற்று வரும் பாலப் பணிகள் முடியும் தருவாயில் இருந்து வருகிறது. கொடைக்கானல் மலைச் சாலைகளை விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.