‘அக்ரி ஸ்டேக்‘ வலைத் தளத்தில் மாா்ச் 7 வரை பதிவு செய்யலாம்
‘அக்ரி ஸ்டேக்‘ வலைதளத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 1.31 லட்சம் விவசாயிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் 46.76 லட்சம் விவசாயிகள் உள்ளனா். இந்த விவசாயிகள் தொடா்பான அனைத்து தரவுகளையும் ஒருங்கிணைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த பிப்.6-ஆம் தேதி முதல் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளின் விவரம், அவா்களுக்கு சொந்தமான நிலப் பதிவுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ‘அக்ரி ஸ்டேக்‘ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை 1.31 லட்சம் விவசாயிகள், பிரதமரின் கெளரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனா். இதில், பல விவசாயிகள் குத்தகை நிலங்களில் பயிா் சாகுபடி செய்து வருகின்றனா். ‘அக்ரி ஸ்டேக்‘ வலைத் தளத்தைப் பொருத்தவரை, நிலத்தின் உரிமையாளா்களின் விவரங்கள் மட்டுமே பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதனால், குத்தகை விவசாயிகளால் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. மாவட்டத்தில் இதுவரை சுமாா் 47ஆயிரம் விவசாயிகளின் நில விவரங்கள், ‘அக்ரி ஸ்டேக்’ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எஞ்சிய 84
ஆயிரம் விவசாயிகளில், தங்கள் பெயரில் நிலம் உள்ளவா்கள் மட்டும் மாா்ச் 7-ஆம் தேதிக்குள் தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களிலோ, பொதுச் சேவை மையங்களிலோ பதிவு செய்து கொள்ளலாம் என வேளாண்மைத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.