தலைக்கவசம் அணியாத காவலர்கள் இடைநீக்கம்: டிஜிபி உத்தரவு!
தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டும் காவலர்களை உடனடியாக இடைநீக்கம் செய்ய தமிழக காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமலில் உள்ளது. தலைக்கவசம் அணியாதவர்களுக்கு போக்குவரத்து காவலர்கள் ரூ. 1,000 அபராதம் விதிக்கின்றனர்.
தொடர்ந்து தலைக்கவசம் அணியாமல் காவலர்களிடம் பிடிபடுபவரின் வாகன ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அபராதம் விதிக்கும் காவலர்களே தலைக்கவசம் அணியாமல் செல்வதாக புகார் எழுந்துள்ளது. மேலும், தலைக்கவசம் அணியாமல் செல்பவர்களை விடியோ எடுக்கும் மக்கள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுகின்றனர். இது காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அமைகிறது.
இந்த நிலையில், தலைக்கவசம் அணியாமல் செல்லும் காவலர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய அனைத்து மாநகர ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், காவல் நிலையங்களில் நாள்தோறும் காலை நடைபெறும் வருகைபதிவு கூட்டத்தில், இருசக்கர வாகனத்தில் வரும் காவலர்கள், மேல் அதிகாரியிடம் தலைக்கவசத்தை காண்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைக்கவசம் இல்லாமல் வரும் காவலர்களின் வாகன சாவியை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், ஐஎஸ்ஐ முத்திரை பதித்த தலைக்கவசம் வாங்கிவந்த பிறகு சாவியைக் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைத்து காவலர்களும் சீட் பெல்ட் போட வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.