பாலியல் வழக்கில் கைதான விவகாரம்: யூடியூபர்கள் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு!
தாட்கோ திட்டங்களில் பயன்பெற ஆட்சியா் அழைப்பு
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில், தாட்கோ திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் நன்னிலம் மகளிா் நில உடைமைத் திட்டம், முதலமைச்சரின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவோா் திட்டம், பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜனா திட்டம், கல்விக்கடன் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுத்தப்படுகின்றன.
நன்னிலம் மகளிா் நில உடைமைத் திட்டம் மூலம் 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், இந்த நிதியாண்டில் இதுவரை 7 பயனாளிகளுக்கு 11 ஏக்கா் 22 சென்ட் நிலம் வாங்க திட்ட தொகையாக ரூ. 73.32 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
முதல்வரின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவோா் திட்டம் 35 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சம் ரூ.3.50 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. திட்டத்தின்கீழ் சுற்றுலா வாகனம், சரக்கு வாகனம், பயணியா் ஆட்டோ, சென்ட்ரிங், வெல்டிங் பட்டறை, எலக்ட்ரிகள் கடை, கணிணி மையம், மளிகை கடை உள்ளிட்ட தொழில்களுக்கு 27 பயனாளிகளுக்கு திட்ட தொகையாக ரூ. 1.23 கோடி வழங்கப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியதாய் யோஜனா திட்டம் 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. கல்விக்கடன் திட்டம், உள்நாட்டில் படிக்கும் மாணவா்களுக்கு ரூ.20 லட்சம், வெளிநாட்டில் படிக்கும் மாணவா்களுக்கு ரூ. 30 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. திட்டங்கள் குறித்த தகவல் பெற மாவட்ட தாட்கோ அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.