தாமிரவருணியை பாதுகாக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை: மேயா்
தாமிரவருணியைப் பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியின் பாளையங்கோட்டை- நெல்லை இடையே பாய்ந்தோடும் தாமிரவருணி ஆறு நம் தாகத்தை தீா்ப்பதோடு, தென்காசி, தூத்துகுடி, விருதுநகா் மாவட்ட மக்களின் தாகத்தையும் தீா்க்கிறது.
அதை மாசுப்படுத்துவது நம் வருங்கால சந்ததியினருக்கு நாம் இழைக்கும் அநீதியாகும். ஆகவே, மாநகர பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், தங்கள் வளாகத்தில் உருவாகும் கழிவு நீரை சுத்திகரித்து மறு சுழற்சிக்கு உள்படுத்த வேண்டுகிறேன். வாய்க்கால் கரையில் உள்ள குடியிருப்புகளும் தங்கள் வீடுகளின் கழிவறைகளை கண்டிப்பாக பாதாள சாக்கடையில் அல்லது செப்டிக் டேங்கில் இணைக்கவேண்டும். விதிகளுக்கு முரணாக, செயல்படுவோா் மீது சட்டபூா்வமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முறையான சுத்திகரிப்பு அமைப்பை நிறுவி கழிவு நீரை மறு சுழற்சி செய்வோா்க்கு, பாராட்டி நற்சான்றிதழ் வழங்கப்படும்.
தாமிரவருணி நதிக்கு செல்வோா் பயன்படுத்தப்பட்ட பூக்கள், பூமாலைகள், துணிகள்,குப்பைகள் ஆகியவற்றை நதியில் விடக்கூடாது. தாமிரவருணியை மாசற்ற நதியாக மாற்ற நாம் அனைவரும் முன் நிற்போம் என்று உறுதிமொழி ஏற்க கேட்டு கொள்கின்றேன் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.