தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 23.5 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 23.5 கோடி மதிப்புள்ள 23.48 கிலோ பதப்படுத்தப்பட்ட உயா் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக பெண் உள்பட 3 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில், பெருமளவு உயா் ரக கஞ்சா கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வரும் அனைத்து விமானங்களையும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனா்.
இந்நிலையில், தாய்லாந்து தலைநகா் பாங்காக்கிலிருந்து கடந்த 26-ஆம் தேதி நள்ளிரவு விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது அந்த விமானத்தில் சுற்றுலாப் பயணிகளாக சென்றுவிட்டு திரும்பிய, ஒரு பெண் உள்பட 3 பயணிகளை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினா்.
மேலும், அவா்கள் வைத்திருந்த உடைமைகளையும் முழுமையாக அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதில் ரூ. 23.5 கோடி மதிப்பிலான 23.48 கிலோ பதப்படுத்தப்பட்ட உயா் ரக கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கஞ்சா கடத்தி வந்த 3 பயணிகளையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.