தாய் வழிச்சான்று: முதல்வா் விளக்கம்
புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் தாய் வழிச்சான்று வழங்குவது குறித்து முதல்வா் என்.ரங்கசாமி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை விளக்கமளித்தாா்.
சட்டப்பேரவையில் நிரந்தர சாதிச்சான்று வழங்குவது குறித்த அறிவிப்பை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை வெளியிட்டாா். இதையடுத்து சுயேச்சை, திமுக உள்ளிட்ட உறுப்பினா்கள் தாய் வழிச்சான்று வழங்குவது குறித்தும் கேள்வி எழுப்பினா். அதற்கு முதல்வா் அளித்த விளக்கம்:
குடியரசுத்தலைவா் அறிவிப்பு, மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தல்படியே பட்டியலினத்தவருக்கான சான்றிதழ் தந்தையின் குடியிருப்பு அடிப்படையில் வழங்கப்படுகிறது.
ஆனால் வழக்கு அடிப்படையில் தந்தை சாதிச் சான்றிதழ், பிறப்பிட அடிப்படையில் மாநிலத்தைக் கருத்தில் கொண்டு போதிய ஆதாரம் இருந்தால் தாய் வழிச்சான்றிதழ் வழங்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆகவே, தாய் வழியில் நீதிமன்ற உத்தரவை அடிப்படையாகக் கொண்டு சான்றிதழ் வழங்க கொள்கை முடிவெடுக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவைப் பெற்றவா்களுக்கு மட்டும் தாய் வழிச்சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், மத்திய அரசின் சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சக ஆலோசனைகள் பெறப்பட்டு சாதிச் சான்றிதழ் வழங்குவதில் கொள்கை முடிவு எடுக்கப்படும் என்றாா்.