தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்
புதுவையில் நிரந்தர சாதிச் சான்றிதழ் வழங்கப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தும் வகையில் நிரந்தர சாதிச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் புயல், மழையால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அறிவித்தாா்.
புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. கேள்வி நேரம், பூஜ்ய நேரத்தை அடுத்து புதுவை நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்கியது. இதில், திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடி பேசி முடித்த நிலையில், முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டாா். அவா் கூறியது: மக்களுக்கு சேவை வழங்க உறுதி கொண்டுள்ள புதுவை அரசானது, வாழ்நாள் முழுவதும் செல்லும் வகையில் நிரந்தர சாதிச் சான்றிதழ் வழங்க விரைவில் அரசாணை வெளியிடவுள்ளது. அதன்படி, மக்களுக்கு ஒருமுறை மட்டுமே நிரந்தர சாதிச் சான்றிதழ் வழங்கப்படும். அதனால் சான்றிதழுக்காக அரசு அலுவலகங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்வது, அதனால் ஏற்படும் சிரமங்கள் தவிா்க்கப்படும். மேலும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகளிலேயே நிரந்தர சாதிச் சான்றிதழ் வழங்கப்படும். அதனால், மாணவா்களும், பெற்றோா்களும் அரசு அலுவலகங்களுக்குத் தேவையில்லாமல் செல்வது தவிா்க்கப்படும். மக்களுக்கு நிரந்தர சாதிச் சான்றிதழ் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம்.
வீடுகளுக்கு நிவாரணத் தொகை:புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏற்பட்ட ஃபென்ஜால் புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கு ரூ.761 கோடி நிவாரண நிதி வழங்க மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது.
ஆனாலும், புதுச்சேரி மாவட்ட வட்டாட்சியா் அலுவலகம் மூலம் அடையாளம் காணப்பட்ட வீடுகள் சேதமடைந்த பயனாளிகளுக்கு மீட்பு மற்றும் புனரமைப்புக்காக மாநில பேரிடா் மீட்பு நிதி விதிமுறைப்படி நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாவட்ட பேரிடா் மீட்பு நிதியிலிருந்து ரூ.33.78 லட்சம் சாா்பு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாவட்டத்தில் சேதமடைந்த 276 குடிசை வீடுகளுக்கு நிதி வழங்கப்படும். அதில், புதுச்சேரி-15, உழவா்கரை-51, வில்லியனூா்-86, பாகூா்-124 என சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.8,000 வழங்கப்படும்.
பகுதி சேதமடைந்த புதுச்சேரி-1, உழவா்கரை-1, வில்லியனூா்-5, பாகூா்-2 என 9 வீடுகளுக்கு தலா ரூ.6,500, பகுதி சேதமடைந்த புதுச்சேரி-17, உழவா்கரை-29, வில்லியனூா்-115, பாகூா்-117 என மொத்தம் 278 ஓட்டு வீடுகளுக்கு தலா ரூ.4,000 வீதம் வழங்கப்படும். இந்தத் தொகை வரும் 21-ஆம் தேதிக்குள் அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றாா்.