Kasthuri: "கஸ்தூரி என்ன தீவிரவாதியா?" - தமிழிசை சௌந்தரராஜன் சொல்வதென்ன?
`தாராவி குடிசை மேம்பாட்டுத் திட்டம்' மகாராஷ்டிரா தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
மும்பை தாராவி குடிசை மேம்பாட்டுத்திட்டம்
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் இன்றோடு முடிவுக்கு வருகிறது. இத்தேர்தல் பல வளர்ச்சித்திட்டங்களின் எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடிய ஒன்றாக மாறி இருக்கிறது. மும்பை தாராவி குடிசை மேம்பாட்டுத்திட்டம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வருகிறது.
கடந்த 2022ம் ஆண்டு உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்த ஏக்நாத் ஷிண்டே அரசு அவசர அவசரமாக டெண்டர் விட்டு அதே ஆண்டு நவம்பர் மாதமே தாராவி குடிசை மேம்பாட்டுத்திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்கியது.
இத்திட்டம் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்படுவதற்கு முன்பு அதன் தலைவர் கெளதம் அதானி உத்தவ் தாக்கரே மற்றும் சரத்பவாரை சந்தித்து பேசினார். தாராவி திட்டம் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட பிறகு பணிகள் முழுவேகத்தில் தொடங்கியது. குடிசைகள் கணக்கெடுப்பு பணிகள் வேகமெடுத்தது.
அதோடு முதல் கட்டமாக ரயில்வேயிடம் நிலம் வாங்கி அதில் தாராவி மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியை அதானி நிறுவனம் தொடங்கி இருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தாராவி திட்டம் கேள்விக்குறியாகி இருக்கிறது. உத்தவ் தாக்கரே அனைத்து பொதுக்கூட்டத்திலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட தாராவி குடிசை மேம்பாட்டுத்திட்டத்தை ரத்து செய்வோம் என்று பேசி வருகிறார்.
அரசியல் கட்சிகள் விமர்சனம்..
தாராவி கடந்த 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கோட்டையாக இருந்து வருகிறது. ஆனாலும் தாராவி திட்டம் தொடர்ந்து கிடப்பில் இருந்து வந்தது. ஒவ்வொரு முறையும் டெண்டர் விடுவதும், பின்னர் அதனை ரத்து செய்வதுமாக முந்தைய அரசுகள் இருந்தது.
நீண்ட இழுபறிக்கு பிறகு தாராவி குடிசை மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று மக்கள் நினைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அரசியல் கட்சிகள் இத்திட்டத்தை நிறுத்தப்போவதாக கூறிக்கொண்டிருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தாராவி தொகுதியில் வர்ஷா கெய்க்வாட் தொடர்ச்சியாக 2004-ம் ஆண்டில் இருந்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அவர் இப்போது எம்.பி.யாகி இருப்பதால் தாராவி தொகுதியில் தனது சகோதரி ஜோதி கெய்க்வாட்டை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தி இருக்கிறார். அதுவும் அரசியலில் இல்லாத ஜோதியை திடீரென வர்ஷா கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்.
தாராவி திட்டம் குறித்து வர்ஷா கெய்க்வாட்டிடம் பேசியபோது, ''தாராவி குடிசைமேம்பாட்டுத்திட்டம் என்பது எனது தந்தை கொண்டு வந்தது ஆகும். அது பல்வேறு காரணங்களால் தடை பட்டுள்ளது. எங்களது அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அதானிக்கு கொடுக்கப்பட்டுள்ள திட்டம் ரத்து செய்யப்படும். தாராவி மக்களுக்கு தாராவியிலேயே வீடு ஒதுக்கப்படும்''என்றார்.
ஆனால் தாராவி திட்டத்தை ரத்து செய்வோம் என்று கூறுவதன் மூலம் தாராவி மக்களை தொடர்ந்து ஏழைகளாக வைத்திருக்க மகாவிகாஷ் அகாடி கூட்டணி திட்டமிட்டு இருப்பதாக துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
தாராவி மக்கள் என்ன சொல்கிறார்கள்..?
தாராவி திட்டத்தை கட்சிகள் அரசியலாக்கி இருப்பது குறித்து தாராவியில் பிறந்து வளர்ந்த சுரேஷ் என்பவரிடம் பேசியபோது, ''நான் குழந்தையாக இருந்த காலத்தில் இருந்து அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு கிடைக்கும் என்று சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன்.
புதிய வீடு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த எனது தாத்தாவும் இறந்துவிட்டார். இப்போதுதான் எங்களுக்கு வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பது எங்களுக்கு முக்கியமல்ல. எங்களுக்கு வீடு வேண்டும் என்பதுதான் முக்கியம்தான்''என்றார்.
தாராவி குடிசை மாற்றுத்திட்டத்தில் இலவச வீடு பெற தகுதியில்லாதவர்களுக்கும் தாராவியிலேயே வீடு கொடுக்கவேண்டும் என்பது மற்றொரு தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் மராத்தா இட ஒதுக்கீடு பிரச்னை போன்று தாராவி திட்டமும் முக்கிய பங்கு வகித்து இருக்கிறது. இத்தேர்தல் தாராவி திட்டம் மட்டுமல்லாது பல வளர்ச்சித்திட்டங்களில் எதிர்காலத்தையும் முடிவு செய்யக்கூடியதாக மாறி இருக்கிறது. மகாராஷ்டிரா தேர்தல் குறித்து இதுவரை இரு கருத்து கணிப்புகள் வெளியில் வந்திருக்கிறது. அதில் ஒன்றில் எதிர்க்கட்சி கூட்டணியும், மற்றொன்றில் ஆளும் கட்சி கூட்டணியும் வெற்றி பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb