பிரதமருடன் ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை!
தாலியை கழற்றிவிட்டு நீட் தேர்வு எழுதச் சொல்வதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்: அமைச்சர்
மாணவர்களின் மனநிலையை சீர்குலைக்கும் வகையில் ஒரு கொடுமையான தேர்வாக நீட் தேர்வு இருப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தாலியை கழற்றி வைத்துவிட்டு நீட் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்லியதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல் என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் முதல்வரின் மனிதநேய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கொளத்தூர் கிழக்கு பகுதி சார்பில் 75 ஆவது நாளாக ரமணா நகர், பெரியார் நகர் அரசு மருத்துவமனை வெளியே உள்ள கார்த்திகேயன் சாலையில் நடைபெற்ற 'அன்னம் தரும் அமுத கரங்கள்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏழை, எளிய பொதுமக்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் தறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் காலை உணவு வழங்கினர்.
தொடர்ந்து முதல்வர் பிறந்த நாளையொட்டி அமைச்சர்கள் கேக் வெட்டி மக்களுக்கு வழங்கியதுடன், முதல்வர் படைப்பகத்தைச் சென்று பார்வையிட்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதல்வர் பிறந்த நாள் விழா சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகளாக கொண்டாடப்பட்டு வருவதாகவும், இரண்டரை மாதங்களுக்கு மேலாக கவியரங்கங்கள், கருத்தரங்கங்கள், பட்டிமன்றம், வாழ்த்து அரங்கம் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருப்பதாகவும் 75 நாட்களாக அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது, அடுத்த ஆண்டு வரை வழங்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் நீட் தேர்வு கட்டுப்பாடுகள் குறித்துப் பேசிய அவர்,
"நீட் தேர்வு வந்த நாள் முதல் குளறுபடிகள்தான், உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளாகிய நீட் தேர்வு மாணவர்களின் மனநிலையை சீர்குலைக்கும் வகையில் ஒரு கொடுமையான தேர்வாக உள்ளது.
தாலியை கழற்றிவைத்து விட்டு நீட் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்வதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல். ஒரு தேர்வு மையத்தில் கணவனே மனைவியின் தாலியை கழற்றிவிட்டு அனுப்பும் துர்ப்பாக்கிய நிலை இருக்கிறது. கட்டுப்பாடுகள் என்ற பெயரில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு வழிகளில் நீட் தேர்வால் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
நீட், நீட்டாக நடந்து கொண்டு இருக்கிறது என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை கூறுகிறார். அவர்களால்தான் நீட் தேர்வு வந்தது. நீட் தேர்வால் 40-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மத்திய அரசு அதற்கு முட்டுக்கட்டையாக இருந்து வருவது மட்டுமின்றி அதனை நியாயப்படுத்தும் வகையில் பேசி வருகிறது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, எடப்பாடி பழனிசாமி, தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் நீட் விலக்கு பெற அரசுக்கு உதவ வேண்டும், அதனை விட்டுவிட்டு அவர்கள் வேறு ஏதேனும் சொல்வது அவர்களின் கையாலாகாதத் தனத்தை காட்டுகிறது.
நீட் தேர்வு முடிவுகள் வந்ததும் ஒரு நாள்கூட காலதாமதமின்றி கலந்தாய்வுகள் தொடங்கும். ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் பரிந்துரைப்படி அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீட்டை 7.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரை உயர்த்துவது குறித்து சட்ட விதிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்படும்.
அவசரகதியாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஓதுக்கீட்டை உயர்த்தும்பட்சத்தில் சிலர் நீதிமன்றத்தை அணுகி பல்வேறு பிரச்சனைகளை சிக்கல்களை எழுப்பக் கூடும்.
எனவே, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீட்டை10% வரை உயர்த்துவது குறித்து சட்ட வல்லுனர்களின் ஆலோசனை அவசியமானது. சட்ட வல்லுநர்களின் ஆலோசனையின் அடிப்படையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்" என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க | 'எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது' - ஹிமான்ஷி நர்வாலுக்கு தேசிய மகளிர் ஆணையம் ஆதரவு