தாவர அடிப்படையிலான அழகுசாதன பொருள்கள்: தேசிய ஆயுா்வேத நிறுவனம் அறிமுகம்
தாவரத்தின் அடிப்படையிலான ரசாயனம் சாராத இயற்கை அழகுசாதன பொருள்களை மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய ஆயுா்வேத நிறுவனம் (என்ஐஏ) அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து அதன் துணைவேந்தா் சஞ்சீவ் சா்மா கூறியதாவது: இயற்கைக்கும் மனித ஆரோக்கியத்துக்கும் இடையிலான நல்லிணக்கத்தை ஆயுா்வேதம் எப்போதும் ஏற்படுத்துகிறது. அந்த வகையில், மக்களுக்கு அன்றாட தோல் பராமரிப்புக்கு பாதுகாப்பான, பயனுள்ள தயாரிப்புகளை அறிமுகம் செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த அழகுசாதன பொருள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
பாதம் பராமரிப்புக்கான கிரீம், கற்றாழை ஜெல், உதட்டு வெடிப்புக்கான ஜெல், மூலிகை சோப்பு உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இந்தத் திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் தயாரிப்புகளின் சந்தை விரிவாக்கத்தைக் கருத்தில்கொண்டு, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்நிறுவனங்களுக்கு இந்தப் பொருள்கள் தயாரிப்புக்கான தொழில்நுட்ப பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.