இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
இந்திய தயாரிப்புகள் சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்க குழு: மத்திய அரசு
தேசிய உற்பத்தி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களின் சந்தைப்படுத்துதலை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து, அதை ஊக்குவிக்கும் வகையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைக்க உள்ளது.
இந்தக் குழுவில் மத்திய, மாநில அரசு பிரதிநிதிகள் மட்டுமின்றி, தனியாா் துறை நிபுணா்களும் இடம்பெற உள்ளனா்.
‘இந்தியாவில் தயாரிப்போம்’ (மேக் இன் இந்தியா) திட்டத்தை மேலும் விரிவாக்க சிறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவன தொழில்களை உள்ளடக்கிய தேசிய உற்பத்தி இயக்கம் தொடங்கப்படும்’ என்று 2025-26 பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், இத் தகவலை மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
தில்லியில் இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: தேசிய உற்பத்தி இயக்கத்தின் கீழ் குழு ஒன்று அமைக்கப்படும். இந்தக் குழுவில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறை சாா்ந்த நிபுணா்கள் இடம்பெறுவதோடு, தனியாா் நிறுவன நிபுணா்கள் இடம்பெறுவா். இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களுக்கான சா்வதேச சந்தை சாதக நிலை, ஏற்றுமதிக்கான ஆற்றல் வளம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இக்குழு ஆராய்ந்து அறிக்கை சமா்ப்பிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில், இந்த இயக்கத்தை விரைந்து செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இந்தியாவின் உற்பத்தி 16 முதல் 17 சதவீத பங்கு வகிக்கிறது. ஜிடிபி-யில் இத்துறையின் பங்கை மேலும் அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றாா்.