``திமுகவுடன் கள்ளக் கூட்டணி'' - நேருக்கு நேராக முட்டிக்கொள்ளும் தவெக vs பாஜக! - என்ன நடக்கிறது?
டாஸ்மாக் விவகாரம் - தவெக குற்றச்சாட்டு
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியதை அடுத்து, டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகை போராட்டத்தை அறிவித்து முற்றுகையிட முயன்ற பா.ஜ.க தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், ஒன்றியம் மற்றும் மாநிலத்தை ஆளும் அரசுகள் வெளியில் தங்களை எதிரிகள் போன்று காட்டிக்கொண்டு புறவாசல் வழியாக மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்று தமிழக வெற்றிக் கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் குற்றம் சாட்டினார்.

பா.ஜ.க-வினர் போராட்டம்...
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``அண்மையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, அதில் ரூ.1,000 கோடி அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிவித்தது. இந்த முறைகேடுகள் தொடர்பாக ஒன்றிய அரசின் அமலாக்கத் துறையானது துரிதமாக செயல்பட்டு மேல் நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும், ஆனால், அது போன்று ஏதும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. மாறாக, அமலாக்கத் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒன்றிய பா.ஜ.க ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக பா.ஜ.க-வினர் தமிழ்நாடு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது விந்தையிலும் விந்தை.
`அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு போராட்டம் ஏன்?'
நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை கையில் வைத்துள்ள ஆளும் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தை நடத்தி அதன் வாயிலாக எதை வலியுறுத்த முயல்கின்றனர்? மற்ற மாநிலங்களில் இது போன்ற மோசடிகள் நடைபெற்ற போது என்ன நடந்தது? தமிழ் நாட்டில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது? எதற்காக இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் பா.ஜ.க - தி.மு.க நாடகப் போக்கினை பார்த்தால் என்ன தெரிகிறது, ஒன்றியம் மற்றும் மாநிலத்தை ஆளும் அரசுகள் வெளியில் தங்களை எதிரிகள் போன்று காட்டிக்கொண்டு புறவாசல் வழியாக மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதே தெரிகிறது.

இதை அம்பலப்படுத்தி ஏற்கெனவே எங்கள் கழகத் தலைவர் அவர்கள் கூறியது முற்றிலும் உண்மையே என்பதை மக்களும் உணரத் தொடங்கி உள்ளனர். இது இன்று நடைபெற்ற போராட்டம் மற்றும் கைது நாடகத்தின் வாயிலாக வெட்ட வெளிச்சமாகி உள்ளது. டாஸ்மாக் நிறுவன முறைகேடுகள் தொடர்பாக உண்மையான விசாரணை நடைபெற வேண்டும். இதுவே மக்கள் நலனை நோக்கும் அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும். எனவே, ஒன்றிய அரசுக்கு தமிழக மக்கள் நலனில் உண்மையான அக்கறை இருக்கும் எனில் டாஸ்மாக் மோசடி விவகாரத்தில் தொடர்ந்து மேல் நடவடிக்கை மேற்கொண்டு தவறு இழைத்தவர்களுக்கு சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என தமிழக வெற்றி கழகத் தலைவர் அவர்களின் வழியில் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
இந்த நிலையில், சென்னை கிழக்கு கடற்கரையில் உள்ள அக்கரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,``தவெக-வை முதல்ல களத்துக்கு வரச் சொல்லுங்க. சும்மா ஸ்கூல் பசங்க மாதிரி உக்காந்துட்டுட்டு அரசியல் பண்ணிட்டு இருக்காங்க. சினிமா ஷூட்டிங்ல உக்காந்துட்டு பாட்டு பாடிட்டு, நடிகையோட இடுப்ப கிள்ளிட்டு அரசியல் பண்ணிட்டு இருக்காரு விஜய். தவெக எல்லையை மீறக்கூடாது. நான் களத்திலிருந்து போராடிக் கொண்டு, பேசுறேன். விஜய் வீட்டில் இருந்து அரசியல் செய்கிறாரா? விஜய் WORK FROM HOME அரசியல்வாதியா.

நாடகம் பண்ணுவது விஜய். தி.மு.க-வின் பி டீம் தான் தமிழக வெற்றிக் கழகம். சும்மா களத்துக்கு வராம, நடிக்கிற இடத்திலிருந்து அறிக்கை டைப் பண்ணி போட்டுட்டு இருந்தா அது அரசியலா? படத்துல சிகரெட் குடிப்ப, தண்ணியடிப்ப இதெல்லாம் பண்ணிட்டு டாஸ்மாக் பத்தி பேச விஜய்க்கு யாரு உரிமை கொடுத்தா? மாஸ்டர் படத்துல விஜய் கேரக்டர் என்ன? சும்மா ஒரு குல்லாவை போட்டுட்டு நான் சிறுபான்மை இனமக்களுக்கு ஆதரவுனு ஒருநாள் இஃப்தார் இருந்துட்டா போதுமா? எனக்கும் பேசத் தெரியும். அறிக்கை, புஸ்ஸி ஆனந்த் எல்லாம் லிமிட்ல இருக்கணும்" எனப் பேசியிருக்கிறார்.