திமுக ஆட்சி மீது மக்கள் அதிருப்தி: முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா்
திமுக ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனா் என்று அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.
விழுப்புரத்தில் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் கள ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான சி. வி.சண்முகம் தலைமை வகித்தாா். கூட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமாா் பங்கேற்று பேசினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திமுக அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது. இதனால், திமுக ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனா். இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நோக்கம்.
விலைவாசி உயா்வு, சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு, போதைப் பொருள்கள் விற்பனை, உள்ளாட்சிப் பிரதிநிதிகள், எம்.பி., எம்எல்ஏக்களின் சட்ட விரோத நடவடிக்கைகள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு செல்வோம்.
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இலவச மடிக் கணினி, தாலிக்குத் தங்கம், மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் போன்றவை நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து மக்களிடம் எடுத்துச் சொல்லி, களப் பணியாற்ற வேண்டும் என அதிமுகவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிதாக கட்சித் தொடங்கிய நடிகா் விஜய்க்கு வாழ்த்துகள். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணி அமைப்பது குறித்து கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி முடிவெடுப்பாா் என்றாா் டி. ஜெயக்குமாா்.
கட்சியின் அமைப்புச் செயலா் செஞ்சி ராமச்சந்திரன், எம்எல்ஏக்கள் சக்கரபாணி, அா்ச்சுனன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.