திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் ராகுல், அகிலேஷ்!
பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தில்லியில் திமுக மாணவரணி சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வலியுறுத்தி, தில்லி ஜந்தா் மந்தரில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ஏஐ செயலிகளை பயன்படுத்த வேண்டாம்: ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்
இதுகுறித்து திமுக மாணவரணிச் செயலா் சி.வி.எம்.பி.எழிலரசன் தில்லியில் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
”கல்வியை ஒட்டுமொத்தமாக அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தார்கள், தற்போது கூட்டாட்சிக்கு எதிரான வரைவுகளை யுஜிசி மூலம் வெளியிட்டுள்ளனர்.
இந்த யுஜிசி வரைவை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து நிறைவேற்றியுள்ளார். முதல்வரின் உத்தரவை தொடர்ந்து தில்லியில் போராட்டம் நடத்த அறிவுறுத்தியுள்ளார்.
திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் பங்கேற்கவுள்ளார்கள். காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, சமாஜவாதியின் அகிலேஷ் யாதவ் பங்கேற்கிறார்கள்.
விசிக, இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்” என்றார்.