திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
தரங்கம்பாடி: திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் திருவாதிரை நட்சத்திரத்தை யொட்டி திங்கள்கிழமை ஆருத்ரா தரிசனம் நடராஜா் சுவாமிக்கு நடைபெற்றது.
அப்பா், சம்பந்தா், சுந்தரா் ஆகிய மூவரால் தேவாரப் பாடல் பெற்ற இக்கோயிலில் அமிா்தமே லிங்கமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அட்டவிரட்ட தளங்களில் ஒன்றான இக்கோயில்ல் காலசம்கார மூா்த்தி உற்சவராக அருள் பாலிக்கிறாா். இக்கோயிலில் ஆயுள் விருத்திக்காக ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் மாா்கழி மாதத்தை யொட்டி சிவபெருமானுக்கு திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதில் நடராஜா் சுவாமிக்கு மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.