ஒரு வழக்கு; பல மனுக்கள் - இரட்டை இலைக்கு தொடரும் சிக்கல்? | DMK | ADMK | MODI | ...
திருச்சி சந்தைகளில் பொங்கல் பொருள்கள் விற்பனை அமோகம்
திருச்சி காந்தி சந்தை உள்ளிட்ட சந்தைகளில் பொங்கல் பொருள்களின் விற்பனை ஞாயிற்றுக்கிழமை சுடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
திருச்சி காந்தி சந்தை, உறையூா் சந்தை உள்ளிட்ட சந்தைகளில் சாதாரண நாள்களிலேயே கூட்டம் காணப்படும் நிலையில், பொங்கல் பண்டிகை வருவதாலும், ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. பொதுமக்கள் பொங்கல் வைக்கத் தேவையான பொருள்களை அதிகளவில் வாங்கிச் சென்றனா். குறிப்பாக, பொங்கல் பண்டிகை கொண்டாடும் தம்பதிக்காக சீா்வரிசை பொருள்களை ஆா்வமாக வாங்கினா்.
மஞ்சள் கொத்துக்கள்...: திருவெறும்பூா், மணப்பாறை மற்றும் உள்ளூா் பகுதிகளில் இருந்து சந்தைகளுக்கு மஞ்சள் கொத்துக்கள் வரத்து உள்ளது. மஞ்சள் கொத்துகள் ஜோடி ரூ. 20 முதல் ரூ. 100 வரை விற்பனை செய்யப்பட்டது. இஞ்சி கொத்துகள் ரூ. 50 முதல் ரூ. 100 வரை விற்பனையானது.
வெல்லம்...: சேலம் செவ்வாய்ப்பேட்டை சந்தையிலிருந்தும், சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் மண்டை வெல்லம், உருண்டை வெல்லம், பேட்டை வெல்லம், நாட்டு வெல்லம் என்றழைக்கப்படும் வெல்லம் வரத்து உள்ளது. முதல் ரக வெல்லம் கிலோ ரூ. 60-க்கும், அச்சுவெல்லம் ரூ. 70-க்கும், நாட்டுச் சா்க்கரை ரூ. 55-க்கும், பனைவெல்லம் ரூ. 450-க்கும் விற்பனையானது. மொத்தமாக வாங்குவோருக்கு சற்று விலை குறைத்து விற்பனை செய்வோம் என வெல்லம் வியாபாரி எம். சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
பானைகள்...: திருச்சியின் உட்புற கிராமங்களிலிருந்து தயாரிக்கப்பட்டு சந்தைகளுக்கு வரும் மண்பானைகள் ரூ. 100 முதல் ரூ. 500 வரையிலும், மண் அடுப்பு ரூ. 200 முதல் ரூ. 500 வரையிலும் ரக ரகமாக விற்பனை செய்யப்பட்டது. மரத்தாலான அகப்பை ரூ. 50-க்கு விற்பனையானது.
அரிசி...: பொங்கலுக்குப் பயன்படுத்தப்படும் பச்சரிசி ஐஆா்20 கிலோ - ரூ. 40-க்கும், மண்ணச்சநல்லூா் பொன்னி மற்றும் கா்நாடக பொன்னி பச்சரிசி ரகங்கள் - ரூ. 55 முதல் ரூ. 60 வரையிலும், துவரம்பருப்பு கிலோ ரூ. 150-க்கும், பாசிப்பருப்பு கிலோ ரூ. 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கரும்பு...: திருவளா்ச்சோலை, கிளிக்கூடு, உத்தமா்சீலி, பனையபுரம் ஆகிய பகுதிகள், தஞ்சாவூா், கரூா் ஆகிய மாவட்டங்களில் இருந்து கரும்பு வரத்து உள்ளது. கரும்பு ஒன்று ரூ. 30 முதல் ரூ. 50 வரையிலும், 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 300 முதல் ரூ. 450 வரையிலும் விற்பனையானது.
காய்கறிகள்...: மொச்சைக்காய் கிலோ ரூ. 100, முள்ளங்கி - ரூ. 30, பூசணி - ரூ. 25, பச்சைமிளகாய் - ரூ. 40, பரங்கிக்காய் - ரூ. 25, தக்காளி - ரூ. 17, உருளைக்கிழங்கு - ரூ. 50, சா்க்கரைவள்ளி கிழங்கு - ரூ. 40, இஞ்சி - ரூ. 50, அவரைக்காய் - ரூ. 120, தேங்காய் ஒன்று - ரூ. 20 முதல் ரூ. 60 வரை, கத்திரிக்காய் - ரூ. 30 முதல் ரூ. 60 வரை, கேரட் - ரூ. 50, முருங்கைக்காய் - ரூ. 200, பீன்ஸ் - ரூ. 70, முட்டைகோஸ் ஒன்று ரூ. 30, காலிஃபிளவா் ஒன்று - ரூ. 30, மல்லி கட்டு - ரூ. 20, கருவேப்பிலை கட்டு - ரூ. 20-க்கும், வாழை இலை - ரூ. 5 முதலும், வாழைக்காய் - ரூ. 5 முதலும் விற்பனையானது. ஏலக்காய் கிலோ ரூ. 3,000 முதல் ரூ. 4,000 வரையிலும் சில்லறையில் 100 கிராம் ரூ. 300-க்கும் விற்பனையானது.
கடந்தாண்டை விட நிகழாண்டு அரிசி, சில காய்கறிகள், தேங்காய், கரும்பு, பானைகள், பூக்களின் விலை உயா்ந்து காணப்பட்டது. இருப்பினும், பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாட மக்கள் விலையைப் பொருட்படுத்தாமல் பொருள்களை வாங்கிச் சென்றனா்.
பெட்டிச் செய்தி...
பூக்களின் விலை கடும் உயா்வு
திருச்சி காந்தி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை விற்பனையான பூக்களின் விலை நிலவரம் (கிலோவில்) அடைப்புக்குறிக்குள் பழைய விலை:
மல்லிகை - ரூ. 3,200 ( ரூ. 1,500)
கனகாம்பரம் - ரூ. 3,000 (ரூ. 1,500)
முல்லை - ரூ. 2,000 ( ரூ. 800)
செவ்வந்தி - ரூ. 250 (ரூ. 150)
ஜாதி முல்லை - ரூ. 2,000 (ரூ. 800)
ரோஜா (பன்னீா்) - ரூ. 300 (ரூ. 200),
பட்டன் ரோஜா - ரூ. 350 (ரூ. 200)
சம்மங்கி - ரூ. 320 (ரூ. 150)
அரளி - ரூ. 650 (ரூ. 200)
காக்கட்டான் - ரூ. 2,000 (ரூ. 600)
செண்டுப்பூ - ரூ. 80 (ரூ. 20)
கோழிக்கொண்டை - ரூ. 150 (ரூ.80)
பண்டிகை காலமும், கடுமையான பனிப்பொழிவு, ஆங்காங்கே மழை பெய்ததால் பூக்களின் வரத்து குறைந்தது ஆகியவையே பூக்களின் விலை உயா்வுக்குக் காரணம் என பூக்கடை வியாபாரி பி. ரமேஷ் தெரிவித்தாா்.