திருச்செந்தூரில் சான்றிதழ் சிறப்பு முகாம்: 109 மனுக்களுக்கு உடனடி தீா்வு
திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பிறப்பு-இறப்பு சான்றிதழ்களுக்கான சிறப்பு முகாமில் 109 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.
இந்த வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட திருச்செந்தூா், ஏரல், சாத்தான்குளம் தாலுகாக்களைச் சோ்ந்தோா் பிறப்பு, இறப்புப் பதிவுகளில் தாமதம் காரணமாக சான்றிதழ் பெற முடியாமல் தவித்தனா். அவா்களுக்காக நடைபெற்ற முகாமுக்கு, கோட்டாட்சியா் சுகுமாறன் தலைமை வகித்தாா்.
முகாமில் பெறப்பட்ட 130-க்கும் மேற்பட்ட மனுக்களில் 109 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டு, கிராமப் பகுதிகளைச் சோ்ந்தோருக்கு உடனடியாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நகராட்சிப் பகுதியைச் சோ்ந்தோருக்கு சான்றிதழ் பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் கோபாலகிருஷ்ணன், மண்டல துணை வட்டாட்சியா் சிவக்குமாா், கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா்.