முந்திரிக்காடு டு சந்தனக்காடு : கீழ்குவாகம் ராமசாமி... விதி சொடக்குப் போட்டு அழை...
திருச்செந்தூர்: ஒரு மாதத்திற்குப் பிறகு கோயிலை வலம் வந்த தெய்வானை யானை - மகிழ்ச்சியில் பக்தர்கள்!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 26 வயது பெண் யானையான தெய்வானை வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 18-ம் தேதி உதவி பாகர் உதயகுமார் மற்றும் அவரது உறவினரான சிசுபாலன் ஆகியோரை தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தையடுத்து கால்நடை மருத்துவர்கள், வனத்துறை அதிகாரிகள் ஆகியோர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். யானையின் செயல்பாடுகள் குறித்தும் கண்காணிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் யானை இயல்பு நிலைக்குத் திரும்பியது. அத்துயரச் சம்பவத்தை மறப்பதற்காக, 10 நாட்களுக்குப் பிறகு குடிலை விட்டு வெளியே அழைத்து வரப்பட்ட யானை, ராஜகோபுரத்தின் அடியில் கட்டி வைக்கப்பட்டது. இப்படியாக பகல் நேரத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடமாக மாற்றி கட்டப்பட்டு செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வந்தது.
தற்போது தெய்வானை, இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டதாக கால்நடை மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்ட நிலையில், யானைக் குடிலில் தெய்வானைக்கு கஜபூஜை நடத்தப்பட்டது. இதற்காக அதிகாலையில் சிறப்பு ஹோமமும், அதனைத் தொடர்ந்து கணபதி ஹோமமும் நடந்தது. அப்போது யானை தெய்வானைக்கு துண்டி, வேஷ்டி, மாலை அணிவித்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், ஒரு மாத காலத்திற்கு பிறகு தெய்வானை யானை வழக்கமான நடைபயிற்சிக்கு பாகர்கள் அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து திருக்கோயிலைச் சுற்றி மூன்று முறை வலம் வந்தது. கோயிலைச் சுற்றி வந்த தெய்வானையைப் பார்த்து பக்தர்கள் ‘அரோகரா’ என கோஷம் எழுப்பினர். இருப்பினும் பக்தர்கள் யாரும் தெய்வானையின் அருகில் அனுமதிக்கப்படவில்லை. ஒரு மாதத்திற்குப் பிறகு வெளியே வந்த தெய்வானையால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த சில நாட்களில் வழக்கமாக காலையில் குளியல் போடும் சரவணப் பொய்கையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட நீச்சல் குளத்திற்கு அழைத்துச் செல்லலாம் என கால்நடை மருத்துவர்கள் பாகர்களிடம் கூறியுள்ளனர்.