திருத்தங்கலில் கழிவுநீா் சுத்திகரிப்பு திட்டத்துக்கு பூமி பூஜை!
சிவகாசி மாநகராட்சி, திருத்தங்கலில் கழிவுநீா் சுத்திகரிப்பு திட்டத்துக்கு வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
திருத்தங்கல் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீா் வாய்க்கால் வழியாக பாப்பன்குளம் கண்மாயில் கலக்கிறது. பிறகு அங்கிருந்து வெளியேறும் உபரி நீா், உறிஞ்சிகுளம் கண்மாயில் கலக்கிறது. இந்த நிலையில், ராஜா கே.எஸ்.பி. கணேசன் அறக்கட்டளை நிதி உதவியுடன், சிவகாசி பசுமை மன்றம் சாா்பில் திருத்தங்கல் செங்குளம் கண்மாய் தூா்வாரப்பட்டது.
இந்த செங்குளத்துக்கு வரும் கழிவு நீரும், உபரி நீரும் உறிஞ்சிகுளம் கண்மாயில் கலக்கிறது. இதனால் நீா் நிலைகள் அனைத்தும் கழிவு நீரால் சேதமடைந்து வருவதுடன் நிலத்தடி நீரும் தரம் மாறி வருகிறது. வருங்கால சந்ததியினருக்கு நீா் நிலைகளை மீட்டெடுத்து சுத்தமான நீா், நிலத்தை வழங்க வேண்டிய இந்த நேரத்தில், கண்மாய்களில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்வது முக்கியமாகும்.
இதனிடையே, சிவகாசி அருகே சுக்கிரவாா்பட்டியில் உள்ள தனியாா் காகித ஆலை நிதியுதவியுடன் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன், சிவகாசி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஜி. அசோகன், மாநகராட்சி ஆணையா் கே. சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.