உக்ரைனில் ஈஸ்டர் நாளில் மட்டும் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் திடீர் அறிவிப்பு!
திருப்பத்தூர்: பூங்காவில் மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம்; கவுன்சிலரின் கணவர் மீது புகார்!
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சியின் 4வது வார்டு பகுதியாகிய பாபு நகரில் உள்ள பூங்கா, கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு மரங்களை வளர்த்து சிறுகாடாக மாற்றப்பட்டிருந்தது. இதில் நீர் மருது, புரசை, தேக்கு, வேப்பமரம், வாகை உள்ளிட்ட மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருந்தன.
இந்த பூங்கா, சுற்றுப்புற மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அங்கிருக்கும் இயற்கை சூழலில் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொண்டுவந்தனர்.

இந்நிலையில், நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்காவில் 20-க்கும் மேற்பட்ட மரங்களைக் கடந்த சில நாள்களுக்கு முன் இரவோடு இரவாக வெட்டி, சிலர் கடத்தியுள்ளனர். இதில் 4வது வார்டு திமுக கவுன்சிலர் வித்யாவின் கணவர் சுரேஷுக்கும் பங்கு இருப்பதாகச் சொல்கிறார்கள்.
மறுநாள் நடைபயிற்சிக்கு வந்த பொதுமக்கள், பூங்காவில் மரங்கள் வெட்டப்பட்டதைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர். மரங்களை வெட்ட உரிய அனுமதி பெறப்படவில்லை எனவும், சட்ட விரோதமாக மரங்களை வெட்டி கடத்தியதாகவும், ஜோலார்பேட்டை நகராட்சி கமிஷனர் பிரான்சிஸ் சேவியர், கவுன்சிலரின் கணவர் சுரேஷ் மீது ஜோலார்பேட்டை போலீசில் புகார் பதிவு செய்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, ``மாவட்ட கலெக்டர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் வனத்துறையிலும் தனித்தனியாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது . விசாரனை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.