உக்ரைனில் ஈஸ்டர் நாளில் மட்டும் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் திடீர் அறிவிப்பு!
'திருமணமாகி 10 மாதம் கழித்துதான் குழந்தை பிறக்கும்' - திமுக எம்.பி. சர்ச்சைப் பேச்சு!
திருமணமான அன்றே குழந்தை பிறக்காது, அதற்கு முன்கூட்டியே காதல் செய்து கர்ப்பமாக இருக்க வேண்டும் என திமுக மாநிலங்களவை எம்.பி. கல்யாண சுந்தரம் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சேஷம்பாடி கிராமத்தில் தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக்கொள்வதற்கு அரசாணை வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம்,
"எல்லாவற்றுக்கும் அவசரப்படக்கூடாது. திருமணமாகி பத்து மாதத்திற்குப் பிறகுதான் குழந்தை பிறக்கும். திருமணத்துக்கு முன்பு அல்லது திருமணம் செய்யும் நாளன்றே குழந்தை பிறக்க வேண்டும் என்றால் அது வேறுவிதமாகத்தான் குழந்தை பிறக்கும். முன்கூட்டியே காதல் செய்து கர்ப்பமானால் திருமணம் ஆன நாளில் குழந்தை பிறக்கும் என்றார்.
மேலும் 'அவசரப்பட்டு பேசுவது, கோபப்பட்டு பேசுவதால் நல்லது செய்ய வருபவர்களுக்கு ஆர்வம் குறைந்துவிடும். மக்கள் தங்களுக்கு தேவையானதை செய்து கொடுங்கள் என்றுதான் கேட்க வேண்டுமே தவிர, விதண்டாவாதம் செய்யக்கூடாது' என்றார்.
சமீபத்தில் அமைச்சர் பொன்முடி நிகழ்ச்சியொன்றில் 'விலைமாது' என்று குறிப்பிட்டு பெண்களை மிகவும் கொச்சையாக பேசியிருந்தார். அவரை கட்சிப் பொறுப்பில் இருந்து மட்டும் நீக்கி திமுக அறிவித்தது, அமைச்சர் பதவியில் பொன்முடி தொடர்ந்து நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.