திருவாடானை பகுதியில் களை எடுக்கும் பணி மும்முரம்
திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் களை எடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
திருவாடானை வட்டத்தில் சுமாா் 26 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் நடப்பு சம்பா பருவத்தில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டு சாகுபடி செய்தனா். கடந்த சில நாள்களாக பெய்த சாரல் மழையால் பயிா்கள் நன்கு வளா்ந்தன.
தென்மேற்கு பருவமழை போதிய அளவு இல்லையென்றாலும் பெய்த மழையை பயன்படுத்தி வழக்கம்போல, களை எடுக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும், அஞ்சுகோட்டை, பாண்டுகுடி, வெள்ளையபுரம், மங்களக்குடி, சிறுகம்பையூா், ஓரியூா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் அதிக மழை பெய்து பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
அதே நேரத்தில், கடம்பாகுடி, அச்சங்குடி, திணையத்தூா், கீழ்க்குடி, கீழஅரும்பூா், குளத்தூா், தொண்டி, சின்னதொண்டி, பெருமானேந்தல், நம்புதாளை, முகிழ்த்தகம், சோழியக்குடி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 50 ஆயிரம் ஏக்கா் பரப்பளவு நிலங்கள் மழையை நம்பியே உள்ளன.
தற்போது வயல்களில் தண்ணீா் தேங்கியிருந்தாலும் விவசாயிகள் களை எடுக்கும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனா்.