திருவாரூா்: 3.92 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு -ஆட்சியா் தகவல்
திருவாரூா் மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு, தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஆட்சியா் தி. சாருஸ்ரீ, மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனா்.
நிகழ்வில், ஆட்சியா் தெரிவித்தது:
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 3,92,203 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு, தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
இம்மாவட்டத்தில், கூட்டுறவுத்துறை மூலம் செயல்படும் 595 முழுநேர நியாயவிலைக் கடைகள் மற்றும் 194 பகுதிநேர நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படும்.
நியாயவிலைக் கடைகளின் பணி நாள்களில் சுழற்சி முறையில், வியாழக்கிழமை (ஜன.9) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஜன.12) வரை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழக்கப்படும். விடுபட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு திங்கள்கிழமை (ஜன.13) வழங்கப்படும் என்றாா்.
இந்நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியா் சௌம்யா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சித்ரா, திருவாரூா் நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில், பணிநியமனக் குழு உறுப்பினா் பிரகாஷ், திட்டக்குழு உறுப்பினா் சங்கா், வட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.