போக்குவரத்து இடையூறாக சாலைகளில் கட்டுமானப் பொருள்கள் குவிப்பு
திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு? - மாணவிகள் மயக்கம், பெற்றோர்கள் முற்றுகை!
சென்னை, திருவொற்றியூரில் கடந்த அக்டோபர் 25-ம் தேதி தனியார் பள்ளியொன்றில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதாக 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் மயக்கமடைந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அப்போதே, பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பின்னர், அங்கு வந்த வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, பள்ளியின் மூன்றாவது மாடியில் வாயு கசிவு பிரச்னை இருந்ததாகத் தன்னிடம் கூறப்பட்டதாகவும், அதிகாரிகள் ஆய்வறிக்கை கொடுத்த பிறகுதான் உண்மை தெரியவரும் என்றும் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
இது நடந்து 10 நாள்களுக்குப் பிறகு தீபாவளி பண்டிகை விடுமுறையெல்லாம் முடிந்து இன்று அந்தப் பள்ளி திறக்கப்பட்ட நிலையில், மீண்டும் வாயு கசிவால் சுமார் ஆறு மாணவிகள் மயக்கமடைந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்குப் பள்ளி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் எனப் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களைக் காவல்துறையினர், பள்ளி வளாகத்தைவிட்டு வெளியேறுமாறு கூறவே இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அந்த இடமே பரபரப்பாகியிருக்கிறது.
மேலும், செய்தியாளர்களிடம் பேசிய பள்ளியின் முதல்வர், ``மூன்றாவது மாடியில் இப்போது எந்தப் பிரச்னையும் இல்லை. ஆறாம் வகுப்பு கட்டடத்தில் பிரச்னை. ஏற்கெனவே ஆய்வு செய்திருக்கிறார்கள். ஆனால், ஆய்வறிக்கை எங்களுக்கு வரவில்லை. நாங்கள்தான் பதிவுசெய்து வாங்கவேண்டும் என்று கூறுகிறார்கள்" என்று தெரிவித்திருக்கிறார். இன்னும், முழுமையான காரணம் என்னவென்று யார் தரப்பிலிருந்தும் உறுதியாகத் தெரிவிக்கப்படவில்லை.