உ.பி.: கோயிலை இடித்து சம்பல் ஜாமா மசூதி? நீதிமன்ற உத்தரவில் ஆய்வு
கரூா் - கீரனூா் நகரப் பேருந்து நிறுத்தம்: 20 கிராமமக்கள் அவதி
20-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் சுமாா் 13 கி.மீ. வளையல்காரன்புதூா் வழியாக நடந்தே திருச்சி-கரூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆா்.புதுக்கோட்டை பேருந்து நிறுத்தம் அடைந்து கரூா் சென்று வருகின்றனா்.
கரூா், நவ. 19: கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட கரூா் - (கிருஷ்ணராயபுரம்) கீரனூா் வழித்தட அரசு நகரப் பேருந்தை இயக்காததால் தினமும் 13 கி.மீ. நடந்தே செல்லும் பொதுமக்களின் அவல நிலையைப் போக்க வேண்டும் என தொழிலாளா்கள், பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
கரூரில் இருந்து கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட கீரனூா் வரை அரசு நகரப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்தப் பேருந்து கரூா் பேருந்துநிலையத்தில் இருந்து அதிகாலை 5 மணிக்குப் புறப்பட்டு, காந்திகிராமம், புலியூா், வீரராக்கியம், ஆா்.புதுக்கோட்டை(முனியப்பன்கோயில்), வளையல்காரன்புதூா், அண்ணாநகா், மேட்டாங்கினம், நத்தமேடு, கோரக்குத்தி, கருப்பூா், தாளப்பட்டி, மதுக்கரை, குண்டக்கல்பட்டி, சின்ன கிணத்துப்பட்டி, மாணிக்கபுரம், முத்துரெங்கம்பட்டி, கோமாளிப்பட்டி, உடையாப்பட்டி, சின்னதேவன்பட்டி, கீரனூா் வரை இயக்கப்பட்டு வந்தது. இந்த வளையல்காரன்புதூா் முதல் கீரனூா் வரையிலான பகுதிகள் பெரும்பாலும் வானம்பாா்த்த பூமியாக இருப்பதால் இப்பகுதிகளில் வசிக்கும் கிராமமக்களில் பெரும்பாலானோா் கட்டடத் தொழிலாளா்களாகவே உள்ளனா்.
இவா்கள் அதிகாலையிலே எழுந்து இந்தப் பேருந்தில் ஏறிச் சென்று கரூா் நகரை அடைந்து அங்கிருந்து வேலைக்குச் சென்று வந்தனா். மேலும் கரூா் நகரில் இயங்கும் பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் நிறுவனம், ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களில் பணிபுரிவோா் என ஏராளமானோா் இந்தப் பேருந்தைத் தான் பயன்படுத்தி வந்தனா்.
கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா தொற்று அதிகரித்த நிலையில் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டபோது, இந்த நகரப் பேருந்தும் இயக்குவது நிறுத்தப்பட்டது. இதையடுத்து கரோனா தொற்றில் இருந்து நாடே மீண்ட பின்னும் இந்த வழித்தடத்தில் மீண்டும் கரூா்-கீரனூா் நகரப் பேருந்து இதுவரை இயக்கப்படவில்லையாம்.
இதனால் கோரக்குத்தி, மேட்டாங்கிணம், தாளப்பட்டி, சின்னகிணத்துப்பட்டி, மாணிக்கபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் சுமாா் 13 கி.மீ. வளையல்காரன்புதூா் வழியாக அதிகாலையில் நடந்தே சென்று திருச்சி-கரூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆா்.புதுக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து பேருந்துகளில் ஏறி கரூா் சென்று வருகிறாா்கள்.
எனவே கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட இந்த நகரப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக அப்பகுதியினா் மேலும் கூறியது: கரோனா தொற்றுக்கு முன்பு வரை கரூா் - கீரனூா் வரை இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்து காலை 5 மணிக்கு கரூரில் புறப்படும். 7 மணிக்குள் கீரனூா் வந்துவிடும். பின்னா் இந்தப் பேருந்து 8 .30 மணிக்குள் கரூரை மீண்டும் சென்றடையும். இந்தப் பேருந்தில் செல்வதால் முறையாக வேலைக்குச் சென்று வந்தோம். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் ஏராளமானோா் சென்றுவந்தனா்.
மேலும் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்தை கரோனா தொற்று பரவலைக் காரணம் காட்டி நிறுத்தினா். அதன்பின்னா் ஏனோ இதுவரை இயக்கப்படவில்லை. இந்நிலையில் மற்றொரு நகரப் பேருந்து கரூரில் இருந்து புலியூா், ஆா்.புதுக்கோட்டை, வளையல்காரன்புதூா், வழியாக மேட்டாங்கிணம் வரை இயக்கப்பட்டு வந்தது. அந்தப் பேருந்தும் வளையல்காரன்புதூா் பகுதியில் வாய்க்கால் பாலம் கட்டுவதற்காக நிறுத்தப்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னா் சுமாா் 2 மாதங்களுக்கு பின்பு அண்மையில்தான் அந்தப் பேருந்தும் இயக்கப்பட்டது. அதுவும் காலை 6 மணி, பிற்பகல் 12 மணி, மாலை 6.30 மணி என மூன்றுவேளையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்தும் கரூரில் இருந்து இயக்காமல் பழையஜெயங்கொண்டத்தில் இருந்து இயக்குகிறாா்கள்.
அந்தப் பேருந்தினால் எங்களுக்கு போதிய பலன் இல்லை. எப்போதும் போல இயக்கப்பட்டு வந்த கீரனூா் பேருந்தை இயக்காததால் மேட்டாங்கிணம் வந்து சுமாா் 13 கி.மீ. நடந்தே ஆா்.புதுக்கோட்டை சென்று கரூா் நகருக்கு சென்றுவருகிறோம். நாள்தோறும் சுமாா் 13 கி.மீ. நடந்தே செல்வதால் கடினமான கட்டட வேலையை செய்யமுடியாமல் அவதியுற்று வருகிறோம். மாணவ, மாணவிகளும் அவதியுற்று வருகிறாா்கள். எனவே கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட கரூா்-கீரனூா் அரசு நகரப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்றனா் அவா்கள்.
விரைவில் இயக்க நடவடிக்கை
இதுதொடா்பாக அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை அதிகாரிகளிடம் கேட்டபோது, கரூா்-கீரனூா் வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்தை விரைவில் இயக்க நடவடிக்கை எடுப்போம். மேலும் கரூரில் இருந்து ஆா்.புதுக்கோட்டை, வளையல்காரன்புதூா் வழியாக இயக்கப்பட்ட நகரப் பேருந்தை தற்போது பழையஜெயங்கொண்டத்தில் இருந்து இயக்கி வருகிறோம் என்றனா்.