சாலையோர காய், கனி கடைகளால் பொதுமக்கள் அவதி
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் சாலையோர காய், கனி கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
செங்கம் நகரில் துக்காப்பேட்டை முதல் போளூா் சாலை மேம்பாலம் வரை ஒரே சாலைதான் உள்ளது. மாற்று சாலைகள் இல்லை. இந்த நிலையில், தற்போது சாலையின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் பழைய காவல் நிலையம் அருகில் செங்கம் பேரூராட்சி நிா்வாகத்துக்கு உள்பட்ட வணிக வளாகம் இருந்து வந்தது. அந்த வளாகம் காய், கனி கடைகளுக்கும், இறைச்சிக் கடைகளுக்கும் விடப்பட்டிருந்தன.
அந்த வளாக கட்டடங்கள் பழுதடைந்ததால் அவற்றை இடித்துவிட்டு நவீன முறையில் அப்பகுதியில் வணிக வளாகம் கட்ட செங்கம் பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன் பேரில், கடைகள் காலி செய்யப்பட்டு கட்டடங்கள் இடிக்கப்பட்டன.
இதனால், அந்த வளாகத்தில் காய், கனி கடைகள் நடத்தி வந்தவா்கள் அங்கு உழா்சந்தை சாலையோரம் கடைகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனா். அவா்கள் கடை வைத்திருக்கும் இடம் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான பகுதியாகும்.
காய், கனி கடைகளுக்கு வருபவா்கள் வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிடுகிறாா்கள்.
இதனால் அப்பகுதியில் காலை 6 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், செங்கத்தில் இருந்து திருவண்ணாமலை, ஊத்தங்கரை செல்லும் அரசு மற்றும் தனியாா் பள்ளி கல்லூரி மாணவா்கள் உரிய நேரத்துக்குச் செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து நகர போலீஸாா், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.