பிஎஸ்எல்: ஒளிபரப்பு குழுவில் உள்ள இந்தியர்களை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் அரசு மு...
தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு முன் போராட்டம்!
பஹல்காம் தாக்குதலையடுத்து தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே பல அமைப்புகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஏப்.22 (செவ்வாய்க்கிழமை) பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சூழ்ந்த இடத்தில் பயங்கரவாதிகள் திடீரென புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது நாடு முழுவதுமே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, அட்டாரி - வாகா எல்லை மூடல், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, இந்தியாவுக்கு பாகிஸ்தானியர்கள் வரத் தடை, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடல் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுக்கும் என்று இந்தியா தரப்பில் சில அரசியல் தலைவர்களே கூறி வருகின்றனர்.
இரு நாடுகளுக்கும் இடையே பதட்ட சூழல் அதிகரித்துள்ள நிலையில், தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து அப்பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கையில் பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று நேற்று அறிவிக்கப்பட்டதால், பல்வேறு காரணங்களால் இந்தியாவுக்கு வந்திருந்த பாகிஸ்தானியர்கள் அட்டாரி - வாகா எல்லையில் குவிந்துள்ளனர்.