Nifty: "Buy & Sell பண்ற Level இது இல்ல, Watch பண்ற Level" | IPS Finance Comment ...
தில்லியில் துபை இளவரசர்!
துபை நாட்டு முடி இளவரசர் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
துபையின் முடி இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முஹம்மது அல் மக்தூம் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இன்று (ஏப்.8) இந்தியா வந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று முடி இளவரசராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இந்தியா வந்த அவரை இன்று தில்லி விமான நிலையத்தில் இந்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறை அமைச்சர் சுரேஷ் கோபி அரசு மரியாதையுடன் வரவேற்றார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சருமாக பதவி வகிக்கும் இளவரசர் ஹம்தான் இந்த இரண்டு நாள் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து இருநாட்டு உறவுகள் மற்றும் வளர்ச்சிகள் குறித்து கலந்து ஆலோசிக்கவுள்ளார்.
#WATCH | Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum, Crown Prince of Dubai arrives in New Delhi on his first official visit to India. He was welcomed with a ceremonial Guard of Honour & received by MoS Suresh Gopi at the airport. pic.twitter.com/YmjgbeuVli
— ANI (@ANI) April 8, 2025
இந்நிலையில், இளவரசர் ஹம்தானுடன் ஐக்கிய அரபு அமீரக அரசின் முக்கிய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் அந்நாட்டு தொழிலதிபர்கள் ஆகியோர் இந்தியா வந்துள்ளனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடி அளிக்கும் மதிய உணவு விருந்தில் அவர் இன்று (ஏப்.8) கலந்துக்கொள்வதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தில் தில்லியிலிருந்து மும்பை செல்லும் இளவரசர் ஹம்தான் அங்கு இந்தியா மற்றும் துபையைச் சேர்ந்த தொழிலதிபர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்பின் மூலம் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகளும் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளின் வளர்ச்சியில் இணைந்து செயல்பட வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பரில் ஐக்கிய அமீரக நாடுகளில் ஒன்றான அபுதாபியின் முடி இளவரசர் காலித் பின் முஹம்மது பின் ஜயத் அல் நஹ்யான் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருந்தார். அதன் பின்னர் தற்போது இளவரசர் ஹம்தானின் பயணமானது இருநாட்டு உறவுகளை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், துபை இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாகவும், இரண்டாவது மிகப் பெரிய ஏற்றுமதி தளமாகவும் பங்களித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 8 மாதங்கள் விண்வெளியில்... ரஷிய, அமெரிக்க வீரர்களுடன் புறப்பட்ட சோயுஸ் விண்கலம்!