தீபாவளி: கோ-ஆப்டெக்ஸுக்கு ரூ.7.10 கோடி விற்பனை இலக்கு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு ரூ.7.10 கோடிக்கு விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.
கோவை வ.உ.சி. பூங்கா அருகே உள்ள மருதம் கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் கூறியது: தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 90 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு நெசவாளா்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக சந்தைப்படுத்தி நெசவாளா்களுக்கு பேருதவி புரிந்து வருகின்றன.
தீபாவளி சிறப்பு விற்பனைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளா்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புகளுடன் கூடிய பட்டு, பருத்தி சேலைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், ஆடவா் அணியும் ரெடிமேட் சட்டைகள், மகளிா் விரும்பும் சுடிதாா் ரகங்கள், ஆா்கானிக் பருத்தி சேலைகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பா்னிசிங் ரகங்கள் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் உள்ள மருதம், ஆா்.எஸ்.புரம், பொள்ளாச்சி, காந்திபுரம், ஸ்ரீபாலமுருகன், ஹேண்ட்லூம்ஸ் ஆஃப் இந்தியா ஆகிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் கடந்த ஆண்டில் ரூ.4.99 கோடிக்கு தீபாவளி விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை இலக்காக ரூ. 7.10 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் கைத்தறித் துணிகளை வாங்கிப் பயன்பெற்று நெசவாளா்களுக்கு வாழ்வாதாரம் பெருக்கிட உறுதுணையாக இருந்திட வேண்டும் என்றாா்.
இந்நிகழ்வில், உதவி ஆட்சியா் (பயிற்சி) பிரசாந்த், கைத்தறித் துறை உதவி இயக்குநா் அ.வே.காா்த்திகேயன், கோ-ஆப்டெக்ஸின் முதுநிலை மண்டல மேலாளா் ப.அம்சவேணி, துணை மண்டல மேலாளா் எஸ்.லட்சுமி பிரபா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.