PSU வங்கி பங்குகள் உயர்வு - முதலீட்டாளர்களுக்கு கவனம் அவசியம் | IPS FInance - 34...
துணை ஜனாதிபதி கோவை வருகை: போலீஸ் பாதுகாப்பை மீறி பைக்கில் வேகமாக சென்றது ஏன்? - இளைஞர் சொன்ன காரணம்
சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகை
குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று கோவை வந்திருந்தார். காலை கொடிசியாவில் நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், மதியம் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். அவரின் வருகையை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 1,800 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மாநகராட்சி அலுவலகம் உள்ள டவுன் ஹால் பகுதியிலும், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சி.பி.ராதாகிருஷ்ணன் மதியம் 2.30 மணியளவில் அங்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
அதே நேரத்தில் அங்கு ஒருவழிப் பாதையில், இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் முகத்தை மறைத்துக்கொண்டு அதிவேகமாக வந்தனர்.
காவல்துறையினர் அவர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்தும் அவர்கள் நிற்கவில்லை. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

“காவல்துறை உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யவில்லை.” என்று பாஜக-வினர் கண்டன கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். “இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க” வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.
“எனக்கு எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை. கோவை மக்கள் தான் என் பாதுகாப்பு” என்று சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.
காவல்துறை விளக்கம்
இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், “TN66 AQ 4740 என்கிற வண்டியில் பயணித்த இருவர் காவல்துறை எச்சரிக்கையை மீறி அதிவேகமாக சென்றுவிட்டனர். விசாரணையில் அவர்கள் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம்.” என்று கூறியுள்ளனர்.

இளைஞர் சொன்ன காரணம்
மேலும் அந்த வாகனத்தை ஓட்டிய நபர் பேசும் வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில் அந்த நபர், “மதுபோதையில் இருந்ததால் காவல்துறையினர் அபராதம் போட்டுவிடுவார்கள் என்று வேகமாக சென்று பிறகு கீழே விழுந்துவிட்டோம்.” என்று கூறியுள்ளார்.















