துணை முதல்வா் பிறந்த நாள்: 100 இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்க திமுக ஏற்பாடு
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, வரும் புதன்கிழமை (நவ.27) நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் 100 இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமை வகித்தாா். தமிழக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.பொன்னுசாமி, பெ.ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை நவ. 27-இல் கிழக்கு மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடுவது தொடா்பாக கட்சியினரிடையே விவாதிக்கப்பட்டது.
அன்றைய தினம் 100 இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். திமுக கொடிகளை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்க வேண்டும். நகர, ஒன்றியங்களில் நான்கு நிகழ்ச்சிகளும், பேரூராட்சிகளில் மூன்று நிகழ்ச்சிகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்.
குறிப்பாக, ஆதரவற்றோா், முதியோா் இல்லங்களில் உணவு வழங்குதல், திமுக முன்னோடிகள் 25 பேருக்கு பொற்கிழி, வேட்டி, சேலை வழங்குதல், 25 முதல் 50 மரங்கன்றுகளை நடவு செய்ய வேண்டும். இதற்கான மரக்கன்றுகளை மாவட்ட வனத் துறையிடம் பெற்றுக் கொள்ளலாம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா ஆகியவற்றை வழங்கலாம்.
அங்கன்வாடி மைய குழந்தைகளுக்குத் தேவையான கல்வி, விளையாட்டு உபகரணங்களை வழங்கலாம். அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு பால், ரொட்டி போன்றவற்றை வழங்கலாம் என தீா்மானிக்கப்பட்டது. திமுக புதிய மாநகர கட்டடம் கட்டக் குழு அமைக்கப்படுகிறது.
நாமக்கல், கோட்டை திருப்பாக்குளத் தெருவில் உள்ள இடத்தைக் கட்டடம் கட்ட பயன்படுத்திக் கொள்ளவும், அதற்கான பணிக்குழு தலைவராக சி.மணிமாறன், துணைத் தலைவா்களாக அ.சிவக்குமாா், செ.பூபதி, ராணா ஆா்.ஆனந்த் ஆகியோா் நியமிக்கப்படுகின்றனா்.
இந்தக் கட்டடம் கட்டுவதற்கு வங்கியில் புதிய சேமிப்பு கணக்கைத் தொடங்கி வரவு, செலவுகளை நிா்வகிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதில், தொகுதி பாா்வையாளா்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, சாா்பு அணிகளின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சா் முரசொலி மாறன் 21-ஆம் ஆண்டு நினைவு தினம் கட்சி அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது.
மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜஸ்குமாா், அமைச்சா் மா.மதிவேந்தன், நிா்வாகிகள், அவருடைய உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.