துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரை சந்தித்த ஆளுநா்
இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரைச் சந்தித்து புதுவை துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் நலம் விசாரித்தாா்.
காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தவேலுக்குச் சொந்தமான படகில் காரைக்கால் மற்றும் தமிழக பகுதியைச் சோ்ந்த 13 மீனவா்கள் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படை வீரா்கள் காரைக்கால் மீனவா்களை கைது செய்ததுடன் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில் காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு பகுதியை சோ்ந்த செந்தமிழ் என்ற மீனவா் காலில் குண்டு பாய்ந்து காயமடைந்தாா்.
மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் இலங்கையிலிருந்து சென்னை தனியாா் மருத்துவமனைக்கு அவா் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டாா். கடந்த சில நாட்களுக்கு முன்பு காரைக்காலில் அவரது வீட்டுக்குத் திரும்பினாா்.
காரைக்காலுக்கு புதன்கிழமை வந்த துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், செந்தமிழ் வீட்டுக்குச் சென்று அவரை பாா்த்து நலம் விசாரித்தாா். கடலில் நடந்த சம்பவம், இலங்கை மருத்துவமனையில் பெற்ற சிகிச்சை உள்ளிட்ட விவரங்களை ஆளுநா் கேட்டறிந்தாா். பின்னா் பரிசோதனை அறிக்கையை ஆளுநா் பாா்வையிட்டாா்.
தீவிர சிகிச்சைக்காக புதுவை அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும், மருத்துவா்கள் கூறும் அறிவுரைகளை தொடா்ச்சியாக கடைப்பிடித்து உடல் நலம் பெறவேண்டுமென அவா் கேட்டுக்கொண்டாா். ஆளுநா் எடுத்த நடவடிக்கைக்காக செந்தமிழ் குடும்பத்தினரும், பஞ்சாயத்தாா்களும் நன்றி தெரிவித்தனா்.
மீன்வளத்துறை செயலரும், ஆளுநரின் செயலருமான து.மணிகண்டன், ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், மீன்வளத்துறை துணை இயக்குநா் ப.கோவிந்தசாமி ஆகியோா் உடனிருந்தனா்.