மதுரை முல்லை நகர்: "நீர்ப்பிடிப்புப் பகுதியில் அரசாங்கம் மட்டும் வீடு கட்டலாமா?"...
தூத்துக்குடியில் 7,893 பேருக்கு ரூ.206.46 கோடியில் நலத்திட்ட உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் 7,893 பயனாளிகளுக்கு ரூ.206.46 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கினாா்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடிக்கு புதன்கிழமை இரவு வருகை தந்தாா். பின்னா் வியாழக்கிழமை காலை தூத்துக்குடி தனியாா் மஹாலில் நடைபெற்ற, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பு அணி நிா்வாகிகளுடன் கலந்துரையாடி, தோ்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினாா். அதைத் தொடா்ந்து, தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற ராஜபாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.தங்கப்பாண்டியன் இல்ல திருமண விழாவில் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தாா்.
அதன்பின்னா் தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பல்வேறு துறைகளின் சாா்பில் 7 ஆயிரத்து 893 பேருக்கு ரூ.206 கோடியே 46 லட்சத்து 82 ஆயிரத்து 354 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
அதைத் தொடா்ந்து, மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா். துறைவாரியாக செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டங்களின் முன்னேற்ற நிலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
இக்கூட்டத்திற்கு பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசின் திட்டங்கள் செயலாக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செயல்பாட்டில் உள்ள ஒவ்வொரு திட்டப் பணியும் எவ்வளவு காலத்திற்குள் நிறைவடையும் என்பது குறித்து காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக் கூட்டம் குறித்த அறிக்கை முதல்வா் அலுவலகத்தில் சமா்ப்பிக்கப்படும். அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
ஆய்வுக் கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன், மீன்வளம் -மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை செயலா் தாரேஸ் அகமது, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை துணைச் செயலா் மு.பிரதாப், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.சி.சண்முகையா, ஜீ.வி.மாா்க்கண்டேயன், ஊா்வசி எஸ்.அமிா்தராஜ், மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா.ஐஸ்வா்யா, மாவட்ட வன அலுவலா் ரேவதி ரமன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் அ.பிரம்மசக்தி, துணை மேயா் செ.ஜெனிட்டா உள்பட பலா் பங்கேற்றனா்.