`ஓட்டு கேட்டு வராதீங்க'-அமைச்சர் முத்துசாமிக்கு எதிராக பிளக்ஸ்; ஈரோட்டில் பரபரப்...
தூத்துக்குடி : 11-ம் வகுப்பு மாணவரை கத்தியால் குத்திய போலீஸ் ஏட்டு - நடந்தது என்ன?
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம். இவரது உறவினரான 16 வயதான சிறுவன் நாசரேத் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், ஏரல் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் சிவநேசன் என்பவர், காவலர் சீருடை இல்லாத நிலையில் காலையில் தனது குழந்தைகளை பள்ளியில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே வழியாக செந்தில் ஆறுமுகமும் வேகமாகச் சென்றாராம். இதைப் பார்த்த ஏட்டு சிவநேசன், ”பள்ளிக்கு குழந்தைகள் செல்லும் பாதையில் இப்படி வேகமாகச் செல்லலாமா?” எனச் சொல்லி கண்டித்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ”என்னை எப்படி நீங்கள் திட்டலாம்?” எனச் சொல்லி செந்தில் ஆறுமுகம், சிவநேசனிடம் கேட்டுள்ளார். அப்போது, தான் ஏரல் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருவதைக் கூறியுள்ளார்.
பின்னர் அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டுச் சென்ற செந்தில் ஆறுமுகம், தன்னை சிவநேசன் தாக்கியதாகக் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த 16 வயது சிறுவன் மற்றும் செந்தில் ஆறுமுகத்தின் உறவினர்கள், சிவநேசனிடம் கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில்,16 வயது மாணவரை ஏட்டு சிவநேசன் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
அம்மாணவரின் வயிற்றில் கத்தி உடைந்து இருந்ததால் வலியால் கத்தியுள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றில் இருந்து உடைந்த கத்தி துண்டை வெளியே எடுத்தனர். இதுதொடர்பாக ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் மாணவர் அளித்த புகாரின் அடிப்படையில் சிவநேசனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவநேசன் கையில் வைத்திருந்த கீ செயின் கத்திதான் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸார் சிவநேசனை கைது செய்தனர்.