தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் திடீர் விலகல்; காரணம் என்ன?
தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ராப் வால்டர் விலகியுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான தலைமைப் பயிற்சியாளராக ராப் வால்டர் செயல்பட்டு வந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் முதல் தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளாராக செயல்பட்டு வந்த அவர், தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த பொறுப்பிலிருந்து விலகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: எந்த அணிக்கும் இந்த நிலை வரலாம்; கேகேஆர் தோல்வி குறித்து ரமன்தீப் சிங்!
தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திடம் ராப் வால்டர் தெரிவித்த நிலையில், அதனை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் ஏற்றுக்கொண்டுள்ளது.
பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவது குறித்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் அறிக்கையின் வாயிலாக ராப் வால்டர் தெரிவித்ததாவது: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டதை மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறேன். தென்னாப்பிரிக்க அணியுடன் இணைந்து செய்துள்ள சாதனைகளை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
Cricket South Africa (CSA) wishes to announce the resignation of the Proteas Men’s white-ball head coach, Rob Walter, effective 30 April 2025.
— Proteas Men (@ProteasMenCSA) April 1, 2025
Walter has attributed his resignation to personal reasons, which CSA has accepted.
Walter, who has held the position since March… pic.twitter.com/IFeWGZ2U2T
எனது இந்த பயணத்தில் தென்னாப்பிரிக்க அணியின் வீரர்கள், பணியாளர்கள் மற்றும் கிரிக்கெட் வாரியம் என அனைவரும் மிகுந்த ஒத்துழைப்பு அளித்தார்கள். நான் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதற்கான நேரம் வந்துவிட்டது. தென்னாப்பிரிக்க அணி தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அணியின் அடுத்த பயிற்சியாளரை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவிக்கும் எனத் தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்க அணியுடன் ராப் வால்டர்...
ராப் வால்டரின் பதவிக்காலத்தில் தென்னாப்பிரிக்க அணி பல்வேறு உயரங்களை அடைந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டி வரை தென்னாப்பிரிக்கா முன்னேறியது. கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. இறுதிப்போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியடைந்தது.
இதையும் படிக்க: ஐபிஎல் அறிமுகப் போட்டியில் அசத்திய டாப் 5 பந்துவீச்சாளர்கள்!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரே ராப் வால்டர் தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட கடைசி கிரிக்கெட் தொடர். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிப் போட்டி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.