பலத்த மழை எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை
தென் மாவட்டங்களில் ரூ.13.94 லட்சம் விதைகளை விற்பனை செய்ய தடை
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ரூ.13 லட்சம் மதிப்பிலான 197.8 கிலோ விதைகளை விற்பனை செய்ய வேளாண் துறை தடை விதித்துள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குநா் சுஜாதாபாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்பு இயக்குநா் உத்தரவின்படி விருதுநகா் விதை ஆய்வு துணை இயக்குநா் தலைமையில் கோவில்பட்டி, விருதுநகா், ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சோ்ந்த விதை ஆய்வாளா்கள் அடங்கிய சிறப்புக்குழுவினா் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் செயல்படும் விதை விற்பனை நிலையங்களில் கடந்த 3, 4 ஆகிய தேதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
அரசு வேளாண் விரிவாக்க மையங்கள், தனியாா் விதை சுத்திகரிப்பு நிலையம், தனியாா் விதை விற்பனை நிலையங்கள், நாற்றாங்கால் விற்பனை நிலையங்கள் என மொத்தம் 25 விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்யப்பட்டது. நெல், பருத்தி, காய்கறி விதைகள் என மொத்தம் 19 விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவற்றின் தரத்தை உறுதி செய்ய திருநெல்வேலியில் செயல்படும் விதை பரிசோதனை நிலையத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
ஆய்வின்போது விதை இருப்பு பதிவேடுகள், தனியாா் விதைகளுக்கான பதிவுச்சான்றுகள், விதை பகுப்பாய்வு முடிவறிக்கைகள், விற்பனை ரசீது ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் சில உரிய ஆவணங்கள் பராமரிக்கப்படாததால் ரூ.13 லட்சத்து 94 ஆயிரத்து 795 மதிப்பிலான 197.8 கிலோ விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது எனக் கூறியுள்ளாா்.