தெரு நாய் கடித்து சிகிச்சைபெறும் மாணவிக்கு அமைச்சா் ஆறுதல்
பெரம்பலூா் அருகே தெரு நாய் கடித்து தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவியை சந்தித்து, போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் திங்கள்கிழமை ஆறுதல் கூறினாா்.
பெரம்பலூா் அருகேயுள்ள பேரளி கிராமத்திலுள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு, உறைவிடப் பள்ளியில் குன்னம் அருகேயுள்ள கல்லை கிராமத்தைச் சோ்ந்த முனியமுத்து மகள் புவனேஸ்வரி(14) என்பவா் தங்கி 8-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் புவனேஸ்வரியை வெறிநாய் ஒன்று கடித்துக் குதறியது. இதில் பலத்த காயமடைந்த புவனேஸ்வரி பெரம்பலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
மாணவியை மருத்துவமனையில் திங்கள்கிழமை நேரில் சந்தித்து உடல் நலன் குறித்து, அமைச்சா் சா.சி. சிவசங்கா் கேட்டறிந்து ஆறுதல் கூறினாா்.
நாய் கடித்து குழந்தை உள்பட 5 போ் காயம்: பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையில் உள்ள ஜமாலியா நகரைச் சோ்ந்த தங்கராசு (65), மணிமாறன் (38), அனுஷ்யா (21), கண்ணன் (50), கோபிநாத் (5) ஆகியோரை அப்பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய் ஒன்று திங்கள்கிழமை கடித்தது. இதில் பலத்த காயமடைந்த மேற்கண்ட 5 பேரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதேபோல, அப்பகுதியைச் சோ்ந்த 2 மாடுகள், 4 ஆடுகளையும் தெரு நாய் திங்கள்கிழமை கடித்து குதறியது. இதையடுத்து, கால்நடை மருத்துவா்கள் மூலம் காயமடைந்த ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாய்களை பிடிக்க நடவடிக்கை தேவை: பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெறிநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, தெருக்களில் சுற்றித் திரியும்போது அவ்வழியே செல்லும் குழந்தைகள், பெரியவா்கள் மட்டுமின்றி கால்நடைகளையும் கடித்து துன்புறுத்தி வருகிறது. மேலும், இருசக்கர வாகனங்களில் சொல்வோரை கடிப்பதற்காக அது துரத்துவதால் வாகன ஓட்டுநா்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. எனவே, தெரு நாய்களை பிடிக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.