தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமைநாள் உறுதிமொழியை அனைத்து துறை அலுவலா்கள் புதன்கிழமை எடுத்துக் கொண்டனா்.
சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த தினத்தையொட்டி, தேசிய ஒற்றுமைநாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். இதில், ‘இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமார உறுதிமொழி ஏற்கிறேன் என அனைத்து துறை அலுவலா்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) (பொறுப்பு) ஜெயராமன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.