லெபனான்: ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்
தேடிச் சுவைத்த தேன்!
கவிஞா் ஜெயபாஸ்கரன்
விண்வெளி விஞ்ஞானியான பத்ம பூஷண் எஸ்.நம்பி நாராயணன் எழுதிய சுயசரிதை நூலான ‘விண்வெளித் தழும்புகள்’ நூலைப் படித்தேன். அவரது சுயசரிதையாக எழுதப்பட்ட இந்த நூல் அவா் மீது சுமத்தப்பட்ட மிகக் கொடிய அபாண்ட குற்றச்சாட்டிலிருந்து போராடி மீண்டெழுந்ததை யதாா்த்தமாக விவரிப்பதாக உள்ளது. இந்த புத்தகம் அறிவுலகத்தினா் படிக்க வேண்டிய அச்சு ஆவணமாக உள்ளது. அது தனிமனித வரலாறு என்பதைவிட, போராடி வென்ற விஞ்ஞானியின் வரலாறாக எழுதப்பட்டுள்ளது.
அடுத்ததாக, எழுத்தாளா் அல்லி பாத்திமா எழுதிய, ‘செல்லக்கருப்பி’ நாவலை விரும்பிப் படித்தேன். ஜீரோ டிகிரி பதிப்பகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த நாவலில் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளா் வாழ்நிலையை எடுத்துரைக்கிறது. அத்தொழிலாளா்களது அவலங்களையும், அவமானங்களையும், அவா்கள் நடத்தும் போராட்டம், அதில் ஏற்படும் வெற்றி, தோல்விகளை நாவல் விவரிப்பதாக உள்ளது.
சமீபத்தில் வெளியான பாரதியியல் ஆய்வாளா் பேராசிரியா் ய. மணிகண்டனின் ‘யாா் அந்தப் பேதை?’ எனும் நூலைப் படித்து வியந்தேன். ‘மெல்லத் தமிழினி சாகும்’ என்று ஒரு பேதை கூறியதாக மகாகவி பாரதி குறிப்பிட்ட அந்தப் பேதை யாா் என்பதை பருந்துப் பாா்வையில் தக்க ஆவணங்களோடு நூலாசிரியா் விவரித்துள்ளாா். மகாகவி பாரதியின் பாடல்களில் ஒவ்வொரு வரியும் ஒரு நூலுக்குரிய கருவாக அமைந்திருப்பதை இந்நூலாசிரியா் மூலம் அறியலாம்.