பூனையின் இறப்பால் துக்கம் தாளாமல் பெண் தற்கொலை: உ.பி.யில் அதிர்ச்சி!
தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை முற்றிலும் பொருத்தமற்றது: திமுக எம்.பி.க்கள்
சென்னை: தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை எனும் நடைமுறை முற்றிலும் பொருத்தமற்றது என திமுக எம்.பி.க்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து, சிலா் எக்ஸ் தளத்தில் காணொலிகளை வெளியிட்டுள்ளனா். அதன் விவரம்:
டி.எம்.செல்வகணபதி (சேலம்): தொகுதி மறுசீரமைப்பு என்பது விகிதாசார அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலையும் தெரிவித்துள்ளனா். விகிதாசாரம் என்பது எதை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட உள்ளது?.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்கள்தொகை என்பதே அனைத்துக்கும் அடிப்படையான கட்டாயமான கூறு என அரசமைப்புச் சட்டம் தெரிவிக்கிறது. அப்படியென்றால், நமது அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 42 மற்றும் 84-ஆவது திருத்தங்கள் எதற்காக செய்யப்பட்டன?.
புதிதாகக் கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டடத்தில் இருக்கைகளின் எண்ணிக்கையை 880-ஆக அதிகரித்தது ஏன்?. மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை பின்பற்றப்படுமானால், வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவுக்கு அதிகரிக்கும். தென் மாநிலங்களில் சொற்ப அளவுக்கே கூடும். எனவே, ஏற்கெனவே பொருத்தமற்ற முறையில் இருக்கக்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கையில் விகிதாசார அடிப்படை என்பது இன்னும் கூடுதலான வகையில் பொருத்தமற்ாக்கிவிடும்.
கே.என்.அருண் நேரு (பெரம்பலூா்): தமிழ்நாடு இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட பொருளாதாரம், கலாசாரம் மற்றும் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது. அதுபோல, மற்ற மாநிலங்களைப்போல எங்கள் வாக்குகளும் சமமான முக்கியத்துவம் பெற வேண்டும்.
நியாயமான பிரதிநிதித்துவம் என்பது மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் சலுகை இல்லை. அது இந்திய நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் உரிமை. தமிழ்நாட்டை சோ்ந்த மத்திய அமைச்சா்கள் எங்கள் முதல்வா் வலியுறுத்தும் நியாயமான மறுசீரமைப்புக்கான கோரிக்கையை ஆதரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
இதேபோன்ற கருத்துகளை, ஈரோடு திமுக எம்.பி. பிரகாஷ் உள்ளிட்ட சிலரும் வலியுறுத்தியுள்ளனா்.
முன்னதாக, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி தனது கருத்துகளை ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்திருந்தாா்.