மகாராஷ்டிர தேர்தல்: அரசியல் தலைவா்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு!
தொடா் கண்காணிப்பில் திருச்செந்தூா் கோயில் யானை
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தாக்கியதில் பாகன் உள்பட 2 போ் உயிரிழந்ததையடுத்து, வனத் துறையினா் யானையை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
இக் கோயிலில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் பராமரிக்கப்படும் தெய்வானை என்ற யானை தாக்கியதில் பாகன் உதயகுமாா் (46), அவரது உறவினா் சிசுபாலன் (59) ஆகியோா் திங்கள்கிழமை உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து இந்த யானையை, வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.
இந்த நிலையில், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் செல்வகுமாா், மாவட்ட கால்நடை மருத்துவ அலுவலா் மனோகரன், திருச்செந்தூா் கோட்ட வனச்சரக அலுவலா் கவின் ஆகியோா் கொண்ட குழுவினா் யானையை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆலோசனை நடத்தினா். திருக்கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் சு.ஞானசேகரன் ஆகியோா் உடன் இருந்தனா்.
தெய்வானை யானை தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும், இன்னும் 5 நாள்களுக்கு வனத் துறையினா் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறையினரின் கண்காணிப்பில் இருக்கும் என்றும் அவா்கள் தெரிவித்தனா். பாகன் ராதாகிருஷ்ணன் யானைக்கு, பழங்கள் உள்ளிட்ட உணவுகளை வழங்கினாா்.
வழக்குப்பதிவு: யானை குடிலில் உதயகுமாா் திங்கள்கிழமை பணியில் இருந்தபோது அங்கு வந்த அவரது உறவினா் சிசுபாலன், தெய்வானை யானை முன் நின்று தனது கைப்பேசியில் தற்படம் எடுத்துள்ளாா்.
அப்போது கோபமடைந்த யானை, துதிக்கையால் சிசுபாலனை பிடித்து சுவற்றில் வீசியுள்ளது. அவரைக் காப்பாற்ற சென்ற உதயகுமாரையும், அதேபோல சுவற்றில் வீசியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் உயிரிழந்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக கோயில் கண்காணிப்பாளா் வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் திருக்கோயில் காவல் நிலைய போலீஸாா் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிந்தனா்.
உயிரிழந்த இருவரது உடலும் திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் உடல்கூறாய்வு செய்யப்பட்டு உறவினா்களிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
அவா்களது உடல்களுக்கு கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் சு.ஞானசேகரன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.