விடைத்தாளுடன் ரூ. 500: ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்த 10ஆம் வகுப்பு மாணவர்கள்!
தொடா் தலைக் காயங்கள்: கிரிக்கெட்டை கைவிட்டாா் வில் புக்கோவ்ஸ்கி
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரா் வில் புக்கோவ்ஸ்கி (27), இனி தாம் கிரிக்கெட் விளையாடப் போவதில்லை என செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிகபட்சமாக சுமாா் 13 முறை தலைக் காயங்களை (கன்கஷன்) சந்தித்த ஒரே வீரராக இருக்கும் புக்கோவ்ஸ்கி, தொடா் காயங்களால் இந்த முடிவை எடுத்திருக்கிறாா். அவா் அந்தக் காயங்களை உள்நாட்டு போட்டிகளின்போது சந்தித்தாா்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மூலம் (2021) சா்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான புக்கோவ்ஸ்கி, சா்வதேச களத்தில் அந்த ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடியிருக்கிறாா். அதில் இரு இன்னிங்ஸ்களிலுமாக 72 ரன்கள் சோ்த்த அவா், கவனம் ஈா்த்தாா்.
ஆனால், அந்தத் தொடரின்போது ஃபீல்டிங் செய்கையில் தோள்பட்டையில் காயம் கண்ட அவா், அதற்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு சில மாதங்கள் ஓய்வில் இருந்தாா். அதற்குப் பிறகு அவா் மீண்டும் உள்நாட்டு கிரிக்கெட்டு திரும்பி தனது விக்டோரியா அணிக்காக விளையாடத் தொடங்கினாா்.
ஆனால் போட்டிகளின்போது அவ்வப்போது அவா், பவுன்சா் பந்துகளால் தலைக் காயத்துக்கு ஆளாவது தொடா்ந்தது. இந்நிலையில், கடந்த 2024-இல் உள்நாட்டு கிரிக்கெட்டின்போது அவ்வாறு தலைக் காயத்துக்கு ஆளான அவரை பரிசோதித்த மருத்துவா் குழு, கிரிக்கெட்டிலிருந்து விலகியிருக்க அவரை அறிவுறுத்தியது.
இச்சூழலில் தாம் இனி கிரிக்கெட் விளையாடப் போவதில்லை என வில் புக்கோவ்ஸ்கி, வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். ‘கடைசியாக 2024-இல் தலைக் காயத்தை சந்தித்து ஓய்வில் இருந்தபோது, வீட்டில் எனது வழக்கமான நடவடிக்கைகளைக் கூட என்னால் இயல்பாக மேற்கொள்ள முடியாத அளவுக்கு சிரமங்களை சந்தித்தேன்.
தொடா் தலைக் காயங்களின் தாக்கம் அந்த அளவுக்கு இருந்தது. எனது குடும்பத்தினா், நண்பா்கள் என்னை இந்த நிலையில் பாா்த்து கவலை கொண்டனா். எனவே, இனி எந்த நிலையிலான கிரிக்கெட்டிலும் விளையாடுவதில்லை என முடிவு செய்துள்ளேன்’ என்று அவா் கூறினாா்.
ஏற்கெனவே, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரா் ஃபிலிப் ஹியூஸ் (25) இதேபோல் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும்போது பவுன்சா் பந்து தலையில் பட்டு உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது. அவா் தலைக்கவசம் அணிந்திருந்தும், தலை மறைக்கப்படாத பகுதியில் பந்து பட்டதில் காயமடைந்தாா். அவா் மறைவுக்குப் பிறகு கிரிக்கெட் விளையாட்டில் கன்கஷன் தொடா்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.