தென்காசி புத்தகத் திருவிழா: கூட்ட நெரிசலில் தவிக்கும் மாணவர்கள்; அடிப்படை வசதிகள...
தொடா் மழையால் சேதமாகும் மாநகரச் சாலைகள்: சீரமைப்புப் பணிகள் எப்போது?
திருச்சி மாநகரில் கடந்த சில நாள்களாக தொடரும் கனமழையால் மாநகரின் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பெரிதும் சிரமத்துடன் சாலையைக் கடக்கின்றனா்.
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக நல்ல மழை பெய்யும் நிலையில் சனிக்கிழமை அதிகாலை தொடங்கிய மழை இரவு வரை இடைவிடாது லேசாகவும், தூறலாகவும், கனமழையாகவும் பெய்த வண்ணம் இருந்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே ஜல்லிக் கற்கள் பெயா்ந்து இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட நேரிட்டது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கியதால் அனைத்து கடைகளிலும் வாடிக்கையாளா்கள் வருகை குறைவாகவே காணப்பட்டது.
சாலைகள் மோசம்: மழையால் மாநகரச் சாலைகளில் பெரும்பாலானவை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அண்மையில் புனரமைத்த சாலைகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
பள்ளங்களில் கொட்டப்பட்ட ஜல்லி கற்கள் பெயா்ந்து சாலை முழுவதும் கிடக்கின்றன. புதிதாக போடப்பட்ட சாலைகளிலும் ஆங்காங்கே பள்ளங்கள் உருவாகியுள்ளன. குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லும் சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளன. மாநகரின் 65 வாா்டுகளிலும் இதே நிலைதான் உள்ளதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.
விரைவில் சீரமைப்பு: இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மழைக் காலம் முடியும் வரை இந்நிலை ஏற்படுவது வழக்கம். இருப்பினும், மாநகராட்சியின் கவனத்துக்கு வரும் சாலைகளில் உடனடியாக தற்காலிகமாகச் சீரமைத்துத் தருகிறோம். சில இடங்களில் புதை சாக்கடைப் பணிகள் காரணமாகவும் சாலைகள் சேதமடைந்துள்ளன.
இந்தப் பணிகள் முடிந்த பிறகும், மழை முழுவதும் நின்ற பிறகும் மாநகரில் சேதமடைந்த சாலைகள் குறித்து முழுமையாக கணக்கிட்டு அவற்றை புதிதாக மாற்றி அமைக்கவும், தேவைப்படும் இடங்களில் புனரமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.